ரஷ்யா, ஐக்கிய ராச்சியம், இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனிக்கு அடுத்து போலந்திலும் கொவிட் 19 இறப்புக்கள் 100,000 ஐ தாண்டியது.

செவ்வாயன்று கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கையைப் போலந்து அறிவித்தபோது அங்கே இதுவரை அவ்வியாதியால் இறந்தவர்கள் எண்ணிக்கை 100, 254 ஆகியிருந்தது. அதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களைக் கொவிட் 19 க்கு இழந்த நாடுகளின் வரிசையில் சேர்ந்துகொண்டது 38 மில்லியன் மக்கள் தொகை கொண்ட போலந்தும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பூசி போட்டவர்கள் குறைவான நாடுகளிலொன்றான போலந்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின்னர் மட்டுமே சுமார் 24,000 பேர் கொவிட் 19 ஆல் இறந்திருக்கிறார்கள். அச்சமயத்தில் எந்தத் தட்டுப்பாடுமின்றி தடுப்பு மருந்து கிடைத்தாலும் அதற்கான எதிர்ப்பு கணிசமாக இருப்பதால் தொற்றுக்கள், கடுமையான சுகவீனத்துக்குள்ளாவோர், இறப்போர் தொடர்ந்தும் அதிகமாக இருக்கிறார்கள். அவ்வெதிர்ப்பாளர்களின் வாக்குகளை அரசு இழக்க விரும்பாததால் அரசு தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கவும் தயாராக இல்லை. 

போலந்தின் பிரச்சினைகளிலொன்று அங்கிருக்கும் இளவயது மருத்துவர்கள் உட்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் பலர் அதிக சம்பளம், சலுகைகள் தேடி செல்வந்த நாடுகளுக்குப் புலம்பெயர்தலாகும். அத்துடன் அரசு மருத்துவ சேவைக்குச் செலவுசெய்யும் தொகை சமீப வருடங்களில் கணிசமாகக் குறைக்கப்பட்டிருப்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருத்துவர்கள், தாதிகள் குறைவான நாடுகளிலொன்றாகியிருக்கிறது.

1,000 பேருக்கு ஜேர்மனியில் 4,5 மருத்துவர்கள் சேவையிலிருக்கிறார்கள், போலந்திலோ அது 2,4 ஆகும். தாதியரைப் பொறுத்தவரை ஐரோப்பிய ஒன்றியத்தில் 1,000 பேருக்குச் சராசரியாக 8 பேர் சேவையிலிருக்க போலந்திலேயோ அது 5 ஆகும். ஜேர்மனியில் 1,000 பேருக்கு 14 தாதியர் பணியிருக்கிறார்கள்.

சமீப மாதங்களில் கொவிட் 19 இறப்புக்களில் 83 விகிதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. இறந்த 44 வயதுக்குக் கீழுள்ளவர்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் விகிதம் 90 ஆகும்.

சாள்ஸ் ஜெ. போமன்