சர்வதேச புலிகள் தினம்|அப்படியும் ஒரு தினமா? ஏன் வந்தது தெரியுமா ?
புலிகளுக்கான சர்வதேச தினம் கூட இருக்கிறது . காரணம் இது புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்து அவை அழிவடையாமல் தடுக்கவும் மக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டது. வேறு பல சர்வதேச தினங்களைப் போலவே மிகத் தாமதமாக உலகநாடுகள் சேர்ந்து எடுத்த தீர்மானமாகவும் இதைக் கொள்ளலாம்.
பூனையினத்தைச் சேர்ந்த புலிகள் எப்போதும் கம்பீரமான விலங்குகளாகவே மனிதர்களால் கருதப்படுகின்றன. அதனாலேயே புலியைக் கொல்வதும் அதன் பல்லைச் சங்கிலியில் கோர்த்து மாலையைப் போட்டுக் கொல்வதும் பெரும் வீரம் என்ற மாயையும் எங்களில் பலருக்கு இருந்து வந்திருக்கிறது. அந்த மாயையே கடந்த பல நூற்றாண்டுகளில் புலிகளுக்கு எமனாக மாறியிருந்தது என்பதுதான் புலிகளின் துரதிஷ்டம். புலிகள் ஒப்பீட்டளவில் சிங்கங்களைவிட கூச்சமுள்ள பிராணிகள். அவை பொதுவாகவே கூட்டமாகத் திரிவதில்லை. ஆமாம், உண்மையில் சிங்கமல்ல, புலிதான் சிங்கிளாக வலம் வரும் விலங்கு.
எங்களில் பலருக்கு, இது என்ன புதிதாகப் புலிகளுக்கு என்று ஒரு தினம்? நாம் ஏன் புலிகளைக் காப்பாற்ற வேண்டும்? என்ற கேள்விகள் எழலாம். சூழல் தொகுதி, உணவுச் சங்கிலி, இயற்கைச் சமநிலை என்பன தொடர்பாக கொஞ்சம் அறிந்து கொண்டீர்கள் என்றால் உங்களுக்குள் நிச்சயமாக இந்தக் கேள்வி எழாது. தாவரங்களில் தொடங்கும் உணவுச் சங்கிலியின் உச்சியில் இருப்பவைதான் முழுமையான ஊனுண்ணிகளான சிங்கம், புலி போன்ற விலங்குகள். காட்டில் உள்ள தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை இயற்கையாகவே கட்டுப்படுத்தும் வேலையை இவைதான் செய்கின்றன.
வெளிக் காரணிகள் இந்தச் சமநிலையைக் குழப்பும்போது அதாவது உணவுச் சங்கிலியின் உச்சியில் உள்ள புலி போன்ற விலங்குகள் மனிதர்களால் வேட்டையாடப்படும்போது அவற்றின் எண்ணிக்கை மிக விரைவாகக் குறைவடைய, தாவர உண்ணிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக அதிகரித்து விடுகிறது. இதனால் அவை காட்டில் உள்ள மரம் செடிகளை விரைவாக உண்டு முடிப்பதுடன் மனிதர்களின் விவசாய நிலங்களை நோக்கியும் வரத் தொடங்குகின்றன.
இவ்வாறு உணவுச் சங்கிலியின் இடைநிலையில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும்போது அளவுக்கு அதிகமாக தாவரங்கள் அழிக்கப்படுகின்றன. அதனால் காடழிப்பும் துரிதமாகிறது. நன்னீருக்காக போட்டியும் அதிகரிக்கிறது. இது மனிதரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆஸ்திரேலியாவில் இயற்கை எதிரிகள் இன்மையால் அளவுக்கு அதிகமாகப் பெருகும் ஒட்டகங்களை இதற்கு நல்ல உதாரணமாகக் கொள்ளலாம். இன்றைய உலகில் பல நாடுகளிலும் இதே காரணத்துக்காகத்தான் காலத்திற்குக் காலம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பன்றி, மான் போன்ற விலங்குகளை மக்கள் வேட்டையாட அரசே அனுமதி கொடுக்கிறது.
கடந்த 150 வருடங்களில் உலக அளவில் இருந்து புலிகளின் மொத்த எண்ணிக்கையில் 95% ஆனா புலிகள் மனிதர்களின் நேரடிச் செயற்பாடுகளால் அழிந்துவிட்டன. மனிதர்களால் தமது பெருமைக்காக வேட்டையாடப்பட்டவை, மனிதர்களின் பேராசையினால் காடுகள் அழிக்கப்பட்டபோது வாழிடம், உணவுப் பற்றாக்குறையினால் இறந்தவை, புலிகளின் உடற்பாகங்களுக்காகக் கொல்லப்பட்டவை என பலநாடுகளிலும் புலிகள் மனிதர்களின் செயற்பாடுகளால் வேகமாக அழிவடைந்து கொண்டிருக்கும் இனமாக மாற்றப்பட்டன.
இவ்வாறு உலகம் முழுவதும் மிக வேகமாகக் குறைவடைந்த புலிகளின் மொத்த எண்ணிக்கை 3,200 ஆகக் காணப்பட்ட ஒரு சூழலில்தான் 2010 இல் ரஷ்யாவில் நடைபெற்ற Saint Petersburg Tiger Summit இல் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அழிவடைந்து வரும் இனமாக இனங்காணப்பட்ட புலிகளைப் பாதுகாக்க பல நாடுகள் இணக்கம் தெரிவித்தன. அதன் பின்னர் அந்த நாடுகள் எடுத்த சில முயற்சிகள் காரணமாக மேலும் புலிகள் வேட்டையாடப்படுவது தடுக்கப்பட்டதோடு 2016 இல் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இருப்பினும் எதிர்பார்த்த வீதத்தில் அதிகரிக்கவில்லை. இன்று புலிகளின் எண்ணிக்கை 3,900 ஆக உள்ள நிலையில், 2010 இல் நியமிக்கப்பட்ட இலக்கான 6,400 ஐ இந்த வருட முடிவிற்குள் (2022) அடைவது சாத்தியமற்ற ஒன்றாகவே மாறியுள்ளது.
எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாதிருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
- இன்றுவரை நடைபெறும் தொடர்ச்சியான காடழிப்பினால் புலிகளின் வாழிடப் பரப்பு குறைவடைந்து செல்கிறது.
- தென்கிழக்காசியாவில் தொடர்ந்தும் நடைபெறும் சட்டவிரோதமான புலி வேட்டையும் காரணமாக இருக்கிறது.
- புலிகள் அவற்றுக்கு ஏற்படும் தொற்றுநோய்களாலும் இறக்கின்றன. உதாரணமாக காட்டுக்குள் வேட்டைக்காரர்களால் கொண்டு செல்லப்படும் நாய்களில் இருக்கும் சில நுண்ணுயிர்கள், அந்த நாய்களைக் காட்டில் உள்ள புலிகள் கொன்று தின்னும்போது நிலை ஏற்பட்டால் அந்தப் புலிகளைக் கொல்லும் எமனாக அந்தக் கிருமிகள் மாறிவிடுகின்றன.
- உணவு, நீர் தேடி மனிதர்கள் வாழும் பகுதிக்கு வரும்போது ஏற்படும் மனித – புலி மோதல்களிலும் புலிகள் கொல்லப்படுகின்றன.
- சூழலியல் சுற்றுலா என்ற பெயரில் நிறுவனங்கள் தொடர்ச்சியாக சுற்றுலாப் பயணிகளை புலிகள் வாழும் பிரதேசத்திற்குள் அழைத்துச் செல்வதால் பாதை அமைக்க காடழிப்பு, புலிகளின் சுதந்திர நடமாட்டத்திற்கு தடை என்பனவும் அவற்றைப் பாதிக்கின்றன.
இந்தியாவில் 2011 ம் ஆண்டில் மட்டும் 48 புலிகள் சட்ட விரோதமாகக் கொல்லப்பட்டன என்று தரவுகள் கூறுகின்றன. காட்டில் உள்ள புலிகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவது ஒருபுறம் இருக்க, எட்வர்ட் கிரேஸ் (Edward J. Grace, the U.S. Fish and Wildlife Service’s deputy assistant director for law enforcement) அவர்களின் கூற்றுப்படி கிட்டத்தட்ட 10,000 புலிகள் மனித மிருகங்களால் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மட்டுமே 5,000 வரையான புலிகள் பல்வேறு இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 350 மட்டுமே உயிரியல் பூங்காக்களில் உள்ள அதே நேரம் ஆயிரக்கணக்கான புலிகள் தனிநபர்களின் கைகளிலேயே அகப்பட்டுள்ளன. இன்று Tiktok, Youtube என இன்னபிற சமூக ஊடகங்களில் “So cute”, “Adorable”, என்றெல்லாம் நீங்கள் பாராட்டிப் பதிவு போடும் வீடியோக்களில் இருப்பவையெல்லாம் அவ்வாறு மனித மிருகங்களின் பிடியில் மாட்டிக் கொண்ட அப்பாவி புலிகளும் புலிக்குட்டிகளுமே என்பதைப புரிந்து கொள்ளுங்கள்.
முன்பொரு காலத்தில் மத்திய கிழக்கில் புலி, சிங்கம் போன்றவற்றை வளர்ப்புப் பிராணியாக வைத்திருப்பது கௌரவமாகப் பார்க்கப்பட்டது. இன்றோ அங்கு இப்படியான வனவிலங்குகளை வைத்திருப்பது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகுக்கே நீதி சொல்ல பின் நிற்காத அமெரிக்காவில் பல மாநிலங்களில் புலிகளை வைத்திருக்கவோ, அவற்றை வைத்துக் கொடுமைப்படுத்தி பணம் உழைக்கவோ எந்தத் தடையும் இல்லை. சில மாநிலங்களில் இன்றும் புலியை வளர்ப்பு விலங்காக வைத்துக் கொள்ள அனுமதி பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் காட்டில் வாழும் புலிகளின் எண்ணிக்கையில் கடந்த பத்து வருடங்களில் ஏற்பட்ட 20% அதிகரிப்பு புலிகள் அழிவடையாது தடுக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இனிவரும் நாட்களில் புலிகள் வாழும் நாடுகளில் முறையாக விலங்கு பாதுகாப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்தல், உள்ளூர் சமூக மக்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளல் என்பன அவசியமாகின்றன.
HuntingTrophy என காட்டு விலங்குகளைக் கொன்று அவற்றுடன் புகைப்படம் எடுக்கப் பணத்தை வீசி எறிந்து புலிகள் போன்ற அருகிவரும் விலங்குகளை வேட்டையாடும் மனித மிருகங்களுக்கும் கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். உலகநாடுகள் ஒன்றிணைந்து பல்வேறு நாடுகளிலும் மனித மிருகங்களால் அடைத்து வைக்கப்பட்டு பணம் உழைக்கும் இயந்திரங்களாகப் பயன்படுத்தப்படும் புலிகள் போன்ற அறிய விலங்குகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புலி போன்ற விலங்குகளைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை சட்டப்படி தடை செய்ய வேண்டும். அனைத்து நாடுகளுமே தனிநபர்கள் புலிகளை வாங்குவதையும், வைத்திருப்பதையும் விற்பதையும் முற்றாகத் தடை செய்ய வேண்டும். தற்போது மனிதர்கள் கைகளில் உள்ள புலிகளை மீட்டெடுத்து அவற்றுக்குரிய சரணாலயங்களுக்கு அவற்றை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறுதியாக ஒரு விடயம். இவ்வாறு புலிகள் கொடுமைப்படுத்தப்படுவதற்கு அந்தந்த நாடு அரசையும் சில நிறுவனங்களையுமே புலிகள் தனிநபர்களால் அடைத்து வைக்கப்பட்டு தொடர்ந்தும் துன்புறுத்தப்படும் விடயத்தில் எங்களில் பலரும் பொறுப்பாளிகள் என்பதுதான் உண்மை. விலங்குக் காட்சி சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இவ்வாறான அழிந்து வரும் இனங்களை பார்க்கச் செல்பவரானால் நீங்களும் குற்றவாளிதான். விலங்குகளில் சாகசம் என்ற பெயரில் சர்க்கஸில் பணம் கொடுத்து விலங்குகள் கொடுமைப்படுத்தப்பட காரணமாக இருக்கும் ஒவ்வொருவரும் குற்றவாளிதான். புலிக்குட்டிகளை தூக்கி கையில் வைத்து படம் எடுக்க பணம் கொடுப்பவரானால் நீங்களும் குற்றவாளிதான். பெருந்தொற்றுக் காலத்தில் விலங்கியல் பூங்காவை நடத்தப் பணம் இல்லை என்று விலங்கியல் பூங்கா நடாத்தும் ஒரு நிறுவனம் புலம்பும்போது அதற்கு நன்கொடை வழங்கி அங்கிருக்கும் விலங்குகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுக் கொடுமை அனுபவிக்க காரணமான செய்த ஒவ்வொருவரும் குற்றவாளிதான்.
எழுதுவது : வீமன், கனடா