T20 உலகக்கிண்ணம் இந்தியா வசம்|தென்னாபிரிக்காவின் கனவு தகர்ந்தது

2024 ம் ஆண்டின் T20 உலகக்கிண்ணத்தை பதினேழு வருடங்களின் பின்னர் இந்தியா மீண்டும் தம் வசப்படுத்தியது.


முதற்தடவையாக உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தென்னாபிரிக்க அணியின் உலகக்கிண்ண கனவு இந்தத்தடவையும் தகர்ந்தது.

ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
ஆட்டத்தின் ஆரம்பத்தில் இந்தியா விக்கெட்டுக்களை இழந்திருந்தாலும் ஓட்டங்களில் சராசரியை தளரவிடாமல் நிறைவுவரை ஆடி, 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை குவித்தது. இறுதிப்போட்டியொன்றில் ஆகக்கூடுதலாக எடுக்கப்பட்ட ஓட்ட எண்ணிக்கை இதுவென்பதும் முக்கியமானதாகும்.
ஆட்டத்தில் ஆகக்கூடுதலாக விராட் கோஹ்லி 59 பந்துகளில் 76 ஓட்டங்களை குவித்து மிகச்சிறந்த ஓட்ட எண்ணிக்கைக்கு அழைத்துச்சென்றார் என்பது  குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்காவும் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருந்தும் தென்னாபிரிக்க அதிரடி ஆட்டக்காரர் Heinrich Klaasen அதிரடியாக,  தென்னாபிரிக்காவை வெல்லவைக்கும் எத்தனிப்போடு ஆடியிருந்தார். இருப்பினும் Klaasen ஆட்டமொழக்கவே வெற்றி இந்தியாவின் பக்கம் மாறியது.
நிறைவு ஓவர்களில் ஓட்டங்களை வேகமாக எடுக்க முடியாமலும் விக்கெட்டுக்களையும் இழந்து  தென்னாபிரிக்கா  7 ஓட்டங்களால் தோல்வியைத்தழுவியது.
ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக இந்திய அணிக்காக அதிரடியாக ஆடிய விராட் கோஹ்லி அறிவிக்கப்பட்டார்.

அதேபோல இந்த T20 உலகக்கிண்ணத் தொடரின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் Jasprit Bumrah அறிவிக்கப்பட்டார்.

2007 ஆம் ஆண்டில் T20 முதற்கிண்ணத்தை மகேந்திரசிங் தோனி தலைமையான இந்திய அணி எடுத்ததன் பின்னர், 2024 ம் ஆண்டின் T20 உலகக்கிண்ணத்தை ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா சுவீகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *