புள்ளினமே..!
புள்ளினமே!
காற்று வெளியில்
கால்கள் மிதந்தாய்!
குடும்பம் கூட்டி
கிடக்கை வென்றாய்!
தோற்ற நரனும்
துள்ள நினைத்தான்!
தரையை விடுத்து
தன்மைத் துறந்தான்!
முன்கை முடுக்கி
வான்கை விரித்தாய்!
முந்தி மனிதன்
வாகைப் பறித்தாய்!
தன்னை மிஞ்சும்
சிறகைக் கண்டோர்
திண்மை கொண்டு
திறத்தைத் தந்தார்!
அந்தி மாலை
அகத்தை யடைவாய்!
அலுவல் குறைத்து
அசைவை முடிப்பாய்!
வந்த அலுப்பை
மறந்த நீயும்
வனத்தை நாடி
மகிழ்ச்சி யானாய்!
முதுகு நாணி
வகையைச் சார்ந்தாய்!
முறையாய் எழுந்து
வேலை பார்த்தாய்!
எதுவும் வேண்டி
எடுத்தா சேர்த்தாய்?
எத்தன் போல
ஏய்த்தா தீர்த்தாய்?
முள்ளந் தண்டு
முளைந்த இனமே!
முட்டை களிடும்
விருத்தி குணமே!
கள்ளத் தனங்கள்
கொள்ளை உள்ளக்
கறைகள் குறைகள்
காணா புள்ளே!
~கவிவேந்தர் டாக்டர் சோமதேவன்,சோமசன்மா, ஜொகூர், மலேசியா