ஆயிரம் கவி சொன்ன ஓர் கவி..!
கவிப்பேரரசு வாழ்க!
ஆயிரம்தான் கவிச்சொல்லி அன்னைக்கா பாடிவைத்தாய்?
ஆதிமுதல் நீயாக அரியணையில் அமர்ந்துகொண்டாய்!
ஞாயினது ஈன்றகடன் நவிலுவதாய் கூவலிட்டாய்!
நப்பாசை மேலோங்க நீயுனக்கே மகுடமிட்டாய்!
நாயினமாய் பாலினத்தின் நற்பெண்மை தீண்டிட்டாய்!
நேர்கொள்ளா பார்வையினால் நஞ்சுள்ளே புதைத்திட்டாய்!
வாயினிலே வந்ததெல்லாம் வரிகளென வாதிட்டாய்!
வாலிகண்ண தாசனையே விஞ்சியதாய் கனாகண்டாய்!
தாயினத்தைத் தரம்தாழ்த்தித் தனங்களையே பாடிட்டாய்!
திருந்தாமல் வருந்தாமல் தினவோடு நடந்திட்டாய்!
சாயிதற்கும் மார்பகத்தில் சரணடையத் தேடிட்டாய்!
சாக்கடையை நுகர்ந்திட்டு சந்தனத்தை மூடிட்டாய்!
ஈயினது இயல்பாகி
எச்சத்தில் உழன்றிட்டாய்!
இல்லாத பொல்லாப்பாய் இறுமாப்பின் பலன்பெற்றாய்!
பாயினையும் பள்ளியறை பாடுபொருள்
கவியுரைத்தாய்!
பள்ளிநூலின் அறிவியலைப் புதுக்கவிதை என்றுரைத்தாய்!
பேயிற்குப் படைப்பதுபோல் பாழான பண்தொடுத்தாய்!
பேராசை பிடித்தவனாய் பதவியுள்ளோர் பின்தொடர்ந்தாய்!
போயிருந்த ஊரெங்கும் பெருமைதனை விண்டிட்டாய்!
பணத்துக்கு அடிமையாகிப் பண்பினையே விற்றிட்டாய்!
ஞாயிறுக்கும் திங்களுக்கும் நன்றியின்றி ஆணையிட்டாய்!
நல்லவன்போல் வேடமிட்டு நஞ்சுள்ளம் உள்கொண்டாய்!
கோயிலது புனிதமெல்லாம் காதலிகால் தீர்த்தமென்றாய்!
கர்வத்தின் வாசலிலே கடுந்தவமாய் காத்திருந்தாய்!
தூயதமிழ் எழுதுவதாய் துர்நாற்றம் செய்திட்டாய்!
தோலினையே தினம்விழுங்கி தீஞ்சுவையை ஒதுக்கிட்டாய்!
நீயின்றி தமிழ்திரையில் நிலைவீழும் என்றிருந்தாய்!
நெல்மணியில் பதராக நெறிமறந்து ஒன்றிட்டாய்!
நோயில்நம் தமிழ்ப்பாடல் நொண்டியாக்கி
விற்றுவிட்டாய்!
நயமிக்க சொல்லாடல் நளினத்தைக் கைவிட்டாய்!
தானென்ற கர்வங்கள் தலைக்கேறி நின்றிட்டாய்!
தளும்பியதொ ருகுடமாக தற்புகழ்ச்சி பேசிட்டாய்!
தீயிலிட்டு இரையாக்கித் தீந்தமிழைக் கொன்றிட்டாய்!
தன்மானம் தனையிழந்து புண்பட்டு போயிட்டாய்!
காயினையே
கவர்ந்திட்டு கவிப்பேர ரசென்றிட்டாய்!
காலத்தின் கொடுமைதனில் கணக்காகி கூடிவிட்டாய்!
ஆயினுமே அந்நாளில் அரும்படைப்பை இயற்றிட்டாய்!
அதனாலே ஆர்வலர்கள் அகத்தினிலே நுழைந்திட்டாய்!
~கவிவேந்தர் டாக்டர் சோமதேவன் சோமசன்மா ஜொகூர் மலேசியா
குறிப்பு: இன்று பிறந்தநாள் கொண்டாடும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு
வாழ்த் துப்பா