மட்டக்களப்பில் தொழுநோய் பரவுதலை தடுக்கும் முகமாக விழிப்புணர்வு பேரணி முன்னெடுப்பு.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோய் பரவுகின்ற வீதத்தை குறைக்கும் வகையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் இதனை கட்டுப்படுத்த தொடர்ச்சியான வேலை திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொழுநோய் தொடர்பில் இலங்கையிலே இரண்டாவது இடத்தினை மட்டக்களப்பு மாவட்டம் வகிக்கின்ற காரணத்தினால் பொதுமக்களுக்கு இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்றிட்டங்கள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை அலுவலகத்தினால் முன்நெடுக்கப்பட்டுள்ளன.
தேசிய தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு செவ்வாய்கிழமை (25) மட்டக்களப்பு நகரில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி ஒன்று நடைபெற்றது. கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வு பேரணி நகரின் பிரதான வீதிகளூடாக மட்டக்களப்பு நகரை சென்று பின்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையை வந்தடைந்தது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக பணிப்பாளர் வைத்தியர் சு.முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜயன் வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், தாதியர் பாடசாலை மாணவிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் தொழு நோயைத் தடுக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


