5 வருடங்களுக்கு பிறகு நாட்டை வந்தடைந்த வாகனங்கள்

நாட்டின் தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
இலங்கை அரசாங்கம் கடந்த ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான எடுத்த முடிவைத் தொடர்ந்து, இவ்வாறு முதல் தொகுதி வாகனங்கள் வந்தடைந்தன.
பொருளாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாக 2020ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட நீண்டகால இறக்குமதித் தடையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நாட்டின் வாகனத் துறையில் இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, புதிய விதிமுறைகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் உள்ளூர் சந்தையில் 24.5 மில்லியன் ரூபாய் முதல் 26 மில்லியன் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 31, 2025 திகதியிட்ட 2421/44 என்ற வர்த்தமானி அறிவிப்பு மூலம், 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்த வாகன இறக்குமதி மீதான தற்காலிக இடைநீக்கத்தை இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக நீக்கியது.
கோவிட்-19 தொற்று நோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2021ஆம் ஆண்டில் வாகன இறக்குமதியை நிறுத்த அப்போதைய இலங்கை அரசாங்கம் முடிவு செய்திருந்தது.
கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடித்ததால், வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை மேலும் தொடர அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்கிடையில், ஜூன் 2024இல், நிதி அமைச்சகம் 2025ஆம் ஆண்டுக்குள் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கும் திட்டத்தை அறிவித்தது.
பெப்ரவரி 1, 2025 முதல் அமுலுக்கு வரும் புதிய விதிமுறைகள், பல்வேறு வகையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றன.
அவற்றுள், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான கார்கள் மற்றும் வேன்கள், பொது பயணிகள் போக்குவரத்திற்கான பேருந்துகள், சரக்கு போக்குவரத்து வாகனங்கள், சிறப்பு நோக்க வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மிதிவண்டிகள் மற்றும் பிற மோட்டார் அல்லாத வாகனங்கள் ஆகும்.