யாழ் மத்தி 85 ஓட்டங்கள் முன்னிலையில்| வடக்கின் பெருஞ்சமர் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு
வடக்கின் பெருஞ்சமர் யாழ் மத்திய கல்லூரி எதிர் யாழ் சென்ஜோண்ஸ் கல்லூரி மோதும் இன்றைய துடுப்பெடுத்தாட்டப் போட்டியின் இரண்டாம் நாளில், யாழ் மத்திய கல்லூரி இரண்டாம் இனிங்க்ஸ்க்காக ஆடத்துவங்கி, 85 முன்னிலையில் வர இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியபோது , பலமான நிலையில் துடுப்பெடுத்தாட வந்த சென்ஜோண்ஸ்கல்லூரி , மத்திய கல்லூரி வீரர்களின் அபார பந்துவீச்சை எதிர்கொண்டு தனது 7 விக்கெட்டுக்களையும் வெறும் 80 ஓட்டங்களுக்குள் இழந்தது.
அதன்படி சென்ஜோண்ஸ் தங்கள் முதலாவது இனிங்ஸ்க்காக 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
சென்ஜோண்ஸ் கல்லூரி சார்பாக அனுஷாந்த் 86 ஓட்டங்களை குவித்திருந்தார். அதேபோல யாழ் மத்திய கல்லூரியின் அஸ்நாத் ஐந்து விக்கெடுக்களை சாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இனிங்க்ஸ்க்காக 50 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் , துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மத்தியகல்லூரி அணி, ஆரம்ப வீரர்கள் நின்று நிலைத்தாட தடுமாறினர், இருப்பினும் மத்திய வரிசை வீரர்களின் நிதான ஆட்டத்தில் இன்றைய நாள் நிறைவில் 8 வுக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை எடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தை நிறைவுக்குக் கொண்டுவந்துள்ளது. ஆட்டத்தில் ஸ்மில்ரன் 34 ஓட்டங்களையும் அபிலாஸ் 28 ஓட்டங்களையும் பெற்று அணியை ஸ்திரப்படுத்தினர்.
அதன்படி 85 ஓட்டங்கள் அதிகப்படியாகப்பெற்று இன்றைய ஆட்டம் நிறைவுக்கு வந்திருக்கிறது.
நாளைய மூன்றாம் நாள், வெற்றி தோல்வியை தீர்மானிக்கப்போகும் நாளாக இருக்கப்போகிறது.
நின்று நிலைத்தாடி மத்திய கல்லூரி வீரர்கள் பலமாக எதிர்கொள்வார்களா? அல்லது அபார பந்துவீச்சினால் மத்திய கல்லூரி வீரர்களை ஆட்டமிழக்கச்செய்து , அதிகப்படியான ஓட்டங்களை அடித்து முன்னேறுவார்களா என்பது நாளை தெரிந்துவிடும்.
பலத்த எதிர்பார்ப்பு மிகுந்த போட்டியாக இந்த ஆண்டின் வடக்கின் பெருஞ்சமரும் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.