கடற்படையினரினால் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஆழ்கடல் சுழியோடி கற்கை நெறியும் பயிற்சியும் ஒலுவிலில் துறைமுகத்தில்; ஏழு பேர் ஆழ்கடல் சுழியோடிகளாக தெரிவு!

சம்மாந்துறை அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் படைக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கு ஆழ்கடல் சுழியோடி பற்றிய கற்கை நெறியும், பயிற்சி நெறியும் கடந்த (26,27,28) ஆகிய தினங்களில் தொடர்ச்சியாக ஒலுவில் துறைமுகத்தின் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் சுழியோடி குழுவின் பொறுப்பதிகாரி லெப்டினன் கமாண்டோ பதிரானவின் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சி நெறியில் ஆழ்கடல் சுழியோடிகள் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், ஆழ்கடல் சுழியோடிகளுக்கு ஏற்படும் நோய்கள், ஆழ்கடல் சுழியோடி மூலம் மீட்பு, ஆழ்கடலில் எவ்வளவு தூரம் செல்லலாம், ஆழ்கடலில் பயணம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என பல்வேறு ஆழ்கடல் சுழியோடி பற்றிய கற்கை நெறியும், பயிற்சி நெறியும் வழங்கப்பட்டது.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் சாய்ந்தமருது, சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், தெரிவு செய்யப்பட்ட ஏழு ஆழ்கடல் சுழியோடிகளுக்குமான விசேட ஏழு நாட்கள் பயிற்சி நெறி கடற்படையின் விசேட ஆழ்கடல் சுழியோடி குழுவினரினால் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் படையினரை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவியாளர் அல்தாப், ஒலுவில் துறைமுகத்தின் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் சுழியோடி குழுவின் பொறுப்பதிகாரி லெப்டினன் கமாண்டோ பதிரான போன்றவர்களின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.
ஆழ்கடல் சுழியோடி பயிற்சியை தொடர்ச்சியாக மூன்று நாட்களாக வெற்றிகரமாக நடாத்தி முடித்த ஒலுவில் துறைமுகத்தின் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் சுழியோடி குழுவின் பொறுப்பதிகாரி லெப்டினன் கமாண்டோ பதிரானவின் குழுவினருக்கு அல் உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவரும் அல் உஸ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபருமான மௌலவி ஐ.எல்.எம். முஸ்தபா ஆழ்கடல் சுழியோடி சார்பில் நன்றியுரை தெரிவித்தார்.
மேலும், தொடர்ச்சியான மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சியின் மொழிபெயர்ப்பு சேவையினை மல்வத்தையைச் சேர்ந்த லோஷன் வழங்கியிருந்தார்.