வாக்குரிமையுள்ள ஒரு ரஷ்யக் குடிமகன் நினைப்பதும் கேட்பதும் இப்படித்தான்
-வாக்குரிமையுள்ள ஒரு ரஷ்யக் குடிமகன்
ஊழலற்ற ஜனநாயக, நேர்மையான ஆட்சிகளைப் பற்றிப் பேசும் உலக மக்களே!
நாங்கள் எங்கள் ரஷ்ய நாட்டின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யப் போகிறோம், அதாவது எங்கள் தலைவர் விளாமிடிர் புட்டினிடம், தொடர்ந்தும் எங்கள் நாட்டின் தலைவராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப் போகிறோம்.அது தான் உண்மையும்
ஏன் என்று உங்களுக்குப் புரியவில்லையா, அல்லது புரியாதது போல நடிக்கிறீர்களா?
“தெரிந்தெடுப்பதற்கான சாத்தியங்கள் கிடைப்பது” என்பது அளவுக்கதிகமாக விளம்பரம் செய்யப்பட்ட விடயம் போலத் தோன்றவில்லையா?
யோசித்துப் பாருங்கள்,
பல்பொருள் அங்காடிகளில் உண்மையிலேயே 25 விதமான பற்பசைகள் விற்பனைக்குக் கிடைப்பது அவசியம்தானா! ரொட்டிக்கடையில் ஒரே ஒரு விதமான ரொட்டி மட்டும் வாங்கக் கிடைத்தபோது நாங்கள் மன உழைச்சலில் துன்பப்பட்டோமா?
நாங்கள் கேட்பதெல்லாம் நிம்மதியான வாழ்க்கை மட்டுமே என்பது உங்களுக்குப் புரியவில்லையா? ஒரு புதிய காலையில் விழித்தெழும்போது அந்த நாள் எப்படியிருக்கும் என்றே நிச்சயமில்லாத நிலையை நீங்கள் எப்போதாவது அனுபவித்திருக்கிறீர்களா?
காலையில் எழும்போது மிச்ச உலகமும் உனது உலகம்போலிருக்க, உனது வேலை இருக்க, உனது பிள்ளையின் பாடசாலை நடக்க, அதற்குப் போகும் வாகனம் ஓடிக்கொண்டிருக்க, அங்கே ஆசிரியர்கள் இருக்க, அடுத்த வேளை உணவு உனது குடும்பத்தினருக்குக் கிடைக்க இருக்கும் நிம்மதியை விட்டுவிட்டு வேறேதாவது கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் நீங்கள் சூதாடுவீர்களா?
ஒரு காலத்தில் எங்கள் மீது வெறுப்புக்காட்டுகிறவர்களாக இருந்தது அமெரிக்கா, இப்போ மே, அந்த லண்டன் எங்கள் மீது ஏகப்பட்ட சேற்றை அள்ளி வீசுகிறார்!
எங்கள் ராஜதந்திரிகள் நிம்மதியாக இருக்கவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால், என்ன நடக்கிறது அவர்களுக்கு? திடீரென்று நாட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் அடுத்த நாள் வாழ்க்கையைப் பற்றி அவர்களால் முடிவுசெய்ய முடிந்ததா?
யாரோ திருடர்கள் சோவியத் காலத்தில் தயாரிக்கப்பட்ட நரம்புகளைத் தாக்கும் வாயுவைத் திருடி, இருவர் மீது நச்சுக் காற்றுத் தாக்குதலை செய்து மே அம்மையார் எங்களை வெறுக்கக் காரணமாயிருந்திருக்கிறார்கள். எங்கள் மீது அந்த வெறுப்பு வருவதை நாங்களா சுதந்திரமாக முடிவுசெய்தோம்?
எதற்காக எல்லாரும் எங்களை வெறுக்கிறார்கள்? நாங்கள் அவர்களை விட நல்ல நிலையில் இருப்பதாலா அல்லது அவர்கள் எங்களிடமிருக்கும் பெற்றோலியத்தையும், எரிவாயுவையும் தங்கள் வசமாக்கிக்கொள்ளத் திட்டமிடுகிறார்களா? அதனால்தானே அமெரிக்கா, லிபியாவுக்குள்ளும், ஈராக்கினுள்ளும் நுழைந்தது. ஈராக்கியருக்கோ, லிபியர்களுக்கோ அமெரிக்கர்களை உள்ளே நுழைய விடுவது பற்றி முடிவு செய்யும் சுதந்திரம் இருந்ததா என்ன?
சுதந்திரமாக எல்லாவற்றையும் முடிவுசெய்யும் உரிமையை எங்கள் மீது ஏன் திணிக்கவருகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. எங்களிடம் இருப்பதில் நாம் திருப்தியாக இருக்கிறோம், அது எங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையைத் தருகிறது. ஜனநாயகம் என்பது அளவுக்கதிகமாக விளம்பரம் செய்யப்பட்ட ஒரு தந்திரம். அது எங்கேயுமே ஒழுங்காக வேலை செய்வதாகத் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் லஞ்சமும் ஊழலும்தான் தலைவிரித்தாடுகிறது. எங்கள் நாட்டில் ஒன்றும் அவை அதிகமாக இல்லை. நிச்சயமாக எல்லா நாடுகளிலும் போலத்தான் இங்கேயும் இருக்கிறது.
நாளை ஞாயிறன்று நாங்கள் வாக்களிக்கப்போவது, எங்களிடம் இருக்கும் இன்றைய நிம்மதி தொடரவேண்டும் என்பதற்காகத்தான்!
வாக்குரிமையுள்ள ஒரு ரஷ்யக் குடிமகன்
எழுதுவது – சாள்ஸ் ஜே
http://www.vetrinadai.com/news/%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%af%8d/