சர்வதேச கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற வினோஜ்குமார்
சர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவனும் சம்மாந்துறை பிரதேசத்தில் வசித்தவருமான சோமசுந்தரம் வினோஜ்குமாரின் கண்டுபிடிப்புக்கு வெண்கல விருது மற்றும் சிறப்பு விருது உலகளாவிய ரீதியில் கிடைத்து சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சர்வதேச சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது.தாய்லாந்தின் பேங்கொக் நகரில் சர்வதேச கண்காட்சி மற்றும் வர்த்தக மாநாடு மண்டபத்தில் போட்டியும் கண்காட்சியாகவும் இந்த பிரமாண்ட உலக நிகழ்வு நடைபெற்றது.இங்கு வினோஜ்குமார் கண்டுபிடித்த “கணித உதவியாளன்” எனும் கணித கருவி கணித பாடத்தில் வரும் நிறுவல்கள் மற்றும் திசை கொண்ட எண்கள் போன்ற பல விடயங்களை இலகுவாக கற்பிக்கக்கூடிய உபகரணம் வந்தவர் கவனத்தை ஈர்த்தது. இதன் முக்கிய அம்சம் அனைத்து மாணவர்களும் பிறரின் உதவியின்றி இலகுவாக கற்கமுடியும் என்பதோடு இது செலவு மிகக்குறைந்த கண்டுபிடிப்பாகும். மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒளித்தொழினுட்ப மூலம் மாணவர்கள் இரவு நேரங்களில் வீட்டு மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இதன் மூலம் தோன்றும் ஒளியினால் இலகுவாக கற்கக்கூடியதாக இருப்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.சர்வதேச விருதை பெற்ற இக்கண்டுபிடிப்பு 2017 ஆம் ஆண்டு இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சும் இணைந்து நடாத்திய “ஆயிரம் படைப்புக்கள்” கண்டுபிடிப்பு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.இதுபற்றி வினோஜ்குமார் கருத்து தெரிவிக்கையில் “நான் தரம் 6 யில் இருந்தே கண்டுபிடிப்புதுறையில் மிகுந்த ஆர்வம் இருந்தது என்றும் தின ஆராய்ச்சி குறிப்பு புத்தகம் ஒன்றில் சூழலில் அன்றாடம் காணும் பிரச்சினைகளை குறிப்பு எடுத்து அதனை பரிசோதனை ரீதியாக ஓய்வு நேரங்களில் அதனை செய்து பார்ப்பேன் என்று தெரிவிக்கிறார். மேலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகளையும் விரும்பிப் படிக்கும் ஆர்வத்தால் இப்படியான புதிய கண்டுபிடிப்புக்கள் இலகுவில் சாத்தியமாகின்ற என்று குறிப்பிடுகிறார்.தனது பாடசாலைகளான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கும், சம்மாந்துறை தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் மற்றும் எனது யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் நன்றிகளை தெரிவித்து பெருமை கொள்கின்றார்.”இவரின் இக்கண்டுபிடிப்பு LK/P/19721 எனும் இலக்கத்தின் கீழ் ஆக்கவுரிமை பத்திரத்தையும் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும். அது மட்டுமல்லூமலு இதுவரை 81 கண்டுபிடிப்புக்களை செய்த இவர் 3 சர்வதேச விருதுகளையும் 31 தேசிய விருதுகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.காலக்கிரமத்தில் ஒவ்வொரு கண்டுபிடிப்புகள் பற்றியும் வெற்றி நடை இணையம் அவரின் துறைசார் ஆளுமை பதிவாக வாசகர்களுக்கு எடுத்துக்கொண்டுவர திட்டமிட்டுள்ளது.