லண்டன் கட்டிடத்தின் உச்சியில் 84 பேர் – யார் அவர்கள்?
லண்டன் ஐ.டி.வி கட்டடத்தின் கூரையில் பலர் நிற்பதைக் கண்டு அவ்வழியே சென்ற பலர் திடுக்கிட்டார்கள். பலர் அவசர உதவி இலக்கத்துடன் தொடர்பும் கொண்டார்கள்.
விரைவில் அதன் காரணம் ஊடகங்களில் பரவியது. விபரங்கள் தெரிந்தவுடன் அக்காரணம் பற்றியும் அதை ஐ.டி.வி நிறுவனம் கவனப்படுத்தியது பற்றியும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் உண்டாகின.
#project84 என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் கவனத்துக்கு உள்ளாக்கப்பட்டு அதே பெயரில் ஐ.டி.வி நிறுவனத்தினரால் சுட்டிக்காட்டப்பட்ட விடயம் வாராவாரம் 84 பிரிட்டிஷ் ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதாகும். மேலும் சொல்லப்போனால் பிரிட்டனில் தற்கொலை செய்துகொள்பவர்களில் நான்கில் மூன்று பேர் ஆண்கள். 45 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிட்டனில் இறப்பதுக்குக் காரணம் தற்கொலைகளே.
அக்கட்டடத்தின் முகட்டில் நிஜமாகத் தற்கொலை செய்துகொண்ட 84 பேர்களை மார்க் ஜென்கின்ஸ் என்ற சிற்பியின் மூலமாகத் தத்ரூபமாகச் சிலைகளாக்கி நிறுத்தியிருந்தார்கள். அச்சிலைகளின் மிகத் தத்ரூபமான அமைப்பு அவர்கள் அக்கட்டிடத்திலிருந்து குதிக்கக்கூடும் என்ற பயத்தைப் பலருக்கு உண்டாக்கியது. அத்துடன் நிஜமான மனிதர்களை அப்படியான சிலைகளாக்கிப் பொது இடத்தில் வைத்திருந்ததும் பலரால் விமர்சிக்கப்பட்டது. அதற்காக இறந்தவர்களின் நெருங்கிய உறவினரின் அனுமதில் பெறப்பட்டதாக ஐ.டி.வி நிர்வாகம் தெரிவித்தது.