இஸ்ரேலும் ஆபிரிக்க அகதிகளும்
“ஆபிரிக்காவிலிருந்து வந்த அகதிகள் திரும்பித் தங்கள் நாடுகளுக்குப் போகவேண்டும்,” “திரும்பிப் போகிறவர்களுக்கு இஸ்ரேலிய அரசு தலைக்கு 3,500 டொலர்கள் கொடுக்கும்,” “ திரும்பிப் போக மறுப்பவர்கள் கட்டாயமாகத் தமது நாடுகளுக்கோ அல்லது மூன்றாவது நாடொன்றுக்கோ திருப்பியனுப்பப்படுவார்கள்,” என்ற இஸ்ராயேல் அரசின் கருத்து திடீரென்று “ஆபிரிக்க அகதிகளைக் கட்டாயமாகத் திரும்பிப்போகச் செய்யும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாது,” என்று 24.04 அன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட அகதிகளில் பெரும்பான்மையானோர் எரித்திரியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ராயேலில் சட்டபூர்வமாகவோ அல்லது அதிகாரிகளின் கண்களில் படாமலோ வாழ்ந்துவருபவர்கள்.
சுமார் ஒரு மாதங்களுக்கு முன்பு நாட்டிலிருந்த 20,000 ஆபிரிக்க அகதிகள் திரும்பிப் போய்விட்டதாகவும் மேலும் சுமார் 38,000 பேர் எவ்வித பத்திரங்களுமின்றி வாழ்வதாகவும் மேலும் 1,420 பேர் சுதந்திரமாக வெளியே நடமாட அனுமதிக்கப்படாத அகதி முகாம்களில் வாழ்வதாகவும் இஸ்ராயேல் அறிவித்திருந்தது. கட்டாயமாகத் திருப்பினுப்ப முயல்வதை எதிர்த்து மனித உரிமைக் குழுக்கள் இஸ்ராயேலின் உச்ச நீதிமன்றம் வரை போய் அங்கே தோல்வியும் அடைந்தன.
பெரும்பாலும் வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த யூத அகதிகளாலே கட்டியெழுப்பப்பட்டு கணிசமான சுபீட்சத்துடன் வாழும் மக்களைக் கொண்ட நாடான இஸ்ராயேலே தன்னிடம் வரும் அகதிகளைத் திருப்பியனுப்புவதா என்று பலரும் மூக்கின் மீது விரலை வைத்தார்கள். ஆனாலும், இஸ்ராயேல் தன்னை யூதர்களுக்கான ஒரு ராஜ்யம் என்று தெளிவாகச் சொல்லும் நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ராயேலின் தலைநகரான தெல் அவிவ் குடியேற்ற்ற, குடியுரிமை அதிகாரத்தின் காரியாலயத்தின் முன்பு தினசரி காலை 04.30 முதல் கால்கடுக்க வரிசையில் காத்திருப்பது ஆயிரக்கணக்கான இந்த அகதிகளின் வழக்கமாக இருந்து வருகிறது. நாட்டில் அகதியாக இருக்க அனுமதி வேண்டிக் காத்திருக்கும் இவர்களில் பலர் பாதசாரிகள் சாலையில் படுத்துறங்கி எழும்புவதும் சாதாரணமாகக் காணக்கிடைக்கும் காட்சியே.
ஐ.நா வின் அகதிகள் அமைப்பாலும் “பண்பற்ற செயல்” என்று கண்டிக்கப்பட்ட ஆபிரிக்க அகதிகள் வெளியேற்றத்தை இஸ்ராயேல் நிறுத்தியிருப்பதை பல மனித உரிமை அமைப்புக்களும் அகதிகளும் ஆசுவாசமான பெருமூச்சுடன் பாராட்டியிருக்கிறார்கள்.