சிலி திருச்சபையும் பாலியல் குற்றங்களும்
சிலி நாட்டின் ஒவ்வொரு மேற்றிராணியார்களும் தங்கள் இடத்தைக் காலி செய்ய முன்வந்திருக்கின்றனர். காரணம் கத்தோலிக்க திருச்சபைக்குள் நீண்ட காலமாக நடந்துவந்த சிறார் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களும் அவைகளைப் பாப்பாண்டவர் உட்பட்ட சகல உயர்மட்டத்தினரும் மூடி மறைக்க முற்பட்டதும் ஆகும்.
பதவியிலிருக்கும் 31 மேற்றிராணியார்களும், ஓய்வுபெற்ற 3 மேற்றிராணியார்கலும் தங்கள் ராஜினாமாவுக்கான கையெழுத்துக்களை பாப்பரசரிடம் கையளித்திருக்கின்றனர். சரித்திர ரீதியாக ஒரு நாட்டின் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மட்டத்தினர் சகலரும் கூடிய மாநாட்டில் இப்படி நடப்பது இதுவே முதல் தடவையாகும். அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் ஆராந்து அவர்களைப் பதவியில் தொடர அனுமதிப்பதா, இல்லையா என்று முடிவுசெய்வது பாப்பரசர் கையிலிருக்கிறது.
சிலி திருச்சபைக்குள் நடந்த பாலியல் குற்றங்களைப் பற்றி வத்திக்கான் நடாத்திய ஆராய்ச்சியின் 2,300 பக்க அறிக்கை 18.05 வெள்ளியன்று வெளியானது. அவ்வறிக்கையில் சிலியத் திருச்சபை உயர்மட்டத்தினர் அங்கே பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலம்கள், ஆதாரங்களைத் திட்டமிட்டே அழித்துவிட்டது, திசைதிருப்பியது போன்றவை பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறார்களைத் தங்கள் பாலியல் இச்சைக்குப் பாவித்த பாதிரியார்களைத் திருச்சபை காப்பாற்ற முற்பட்டமையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதனால் அதுபற்றி உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற குரல் எழுந்துகொண்டிருந்தது.
“நடந்தவைகளை எவரும் மூடி மறைக்க முடியாது, அடுத்தவர்களின் தோள்களிலும் சுமக்கவைக்க முடியாது,” என்று அறிக்கை விட்ட பாப்பரசர் பிரான்சீஸ் சிலிய மேற்றிராணிகள் எல்லோரும் உண்டாகியிருக்கும் நிலைமைக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.