பேராயருக்கு ஆஸ்திரேலியா சிறைத்தண்டனை
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பேராயர்
பிலிப் வில்ஸன் அடிலெய்ட் நீதிமன்றத்தில் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இவர் சிறார்கள் மீது பாலியல் குற்றங்களைச் செய்த பாதிரியார்களைத் தனது சிறகுக்குள் வைத்துக் காப்பாற்றியதற்காக சிறைக்கனுப்படும் கத்தோலிக்க சமயத்தின் அதிமுக்கிய புள்ளி ஆவார்.
1970 களில் ஆஸ்திரேலியாவில் பல சிறார்களைத் தனது பாலியல் இச்சைக்குப் பாவித்தவர் ஜேம்ஸ் பிளெட்சர் என்ற பாதிரியார். 1990 களில் கைது செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவின் பல நீதிமன்றங்களில் இதே குற்றங்களுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் பிளெட்சர். கத்தோலிக்க சமய பீடத்தின் நற்பெயரைக் காப்பாற்றுவதற்காக ஆஸ்திரேலியாவின் திருச்சபை மிகப் பெரும் செலவில் அப்பாதிரியாரைக் குற்றமற்றவர் என்று காட்ட வழக்கறிஞர்களை அமர்த்திப் போராடியது.
தன்மீது சாட்டப்பட்ட பாலியல் குற்றங்களில் ஒன்பது குற்றங்களுக்காக பிளெட்சர் தண்டிக்கப்பட்டார். எட்டு வருடச் சிறைத்தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்தபோது 2006 இல் இறந்துபோனார்.
பேராயர் பிலிப் வில்ஸன் தற்போது அல்ஸைமர் வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அடுத்த மாதம் முதல் சிறைக்கனுப்பப்படவிருக்கும் அவரைக் காப்பாற்ற, அவரது வழக்கறிஞர்கள் தொடர்ந்தும் போராடுகிறார்கள்.