ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் மார்க்
அமெரிக்க செனட்டில் கேள்விக்கணைகளால் சில மாதங்களுக்கு முன்பு துளைக்கப்பட்ட பேஸ்புக் அதிபரிடம் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் 22.05 செவ்வாயன்று தமது சந்தேகங்களை எழுப்பினார்கள்.
பேஸ்புக் அதிபர் மார்க் ஸுக்கர்பெர்க் தனது நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் பேஸ்புக் அங்கத்துவர்களின் தனிப்பட்ட விபரங்களைச் சேகரித்து அனுமதியின்றிப் பாவித்துப் பணம் சம்பாதித்தது தெரிந்ததே. அத்துடன் அவர்கள் அவ்விபரங்களை அமெரிக்கா உலகின் வெவ்வேறு பாகங்களில் நடந்த தேர்தல்கள் வேட்பாளர்களிடம் விற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றனர்.
எனவே பேஸ்புக் எந்த முறையில் தனது ஐரோப்பிய அங்கத்துவர்களின் தனிப்பட்ட விபரங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க இருக்கிறது, அதற்கான எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகள் என்ன போன்ற கேள்விகளை ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மார்க் ஸுக்கர்பெர்கிடம் சரமாரியாக எழுப்பினர்.
பேஸ்புக் தனது ஐரோப்பிய அங்கத்துவர்களின் விபரங்களுக்குச் சரியான முறையில் பாதுகாப்புக் கொடுக்காத பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றியம் புதிய கட்டுபாடுகளையும் சட்டங்களையும் போட்டு பேஸ்புக்கையும் மற்றைய சமூக வலைத்தளங்களையும் கண்காணிக்க இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே எச்சரித்திருக்கிறது. அத்துடன் பொய்ச் செய்திகளைப் பரப்புவதிலும் பலர் பேஸ்புக் உட்பட்ட சமூக வலைத் தளங்களைப் பாவித்து வருவதைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோருகிறது.
பேஸ்புக் நிறுவனம் சரியான கவனமின்றி நடந்தமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட பேஸ்புக் அதிபர் தான் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இசைந்து புதிய நடவடிக்கைகள் மூலம் தேவையானவற்றைச் செய்வதாக உறுதியளித்திருக்கிறார்.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் கடந்த வாரத்தில் திவாலாகிவிட்டது. மார்க் ஸுக்கர்பெர்க் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் கொடுத்த விடைகளும், உறுதிகளும் திருப்தியளிக்கக் கூடியதாக இருப்பதாகவே பல அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.