தென்னாசிய மாணவிகளின் மோசமான நிலைமை
“வோட்டர் எய்ட், யுனிசெப் ஆகிய மனிதாபிமான அமைப்புக்கள் சேர்ந்து நடாத்திய ஆராய்வின்படி தெற்கு ஆசியாவின் மூன்றிலொரு பகுதி மாணவிகள் தமது மாதவிலக்கு காலத்தில் பாடசாலைக்குப் போவதில்லை. அதன் காரணங்களாக இருப்பவை மலசலகூட வசதியின்மையும், பிற்போக்குக் கலாச்சார எண்ணங்களுமே என்று குறிப்பிடப்படுகிறது.
சிறீலங்காவின் மூன்றிலிரண்டு பகுதி மாணவிகள் தங்கள் முதலாவது மாதவிலக்கு வரை அது என்னவென்றே அறியாமல் இருக்கிறார்கள்.என்று குறிப்பிடப்படுகிறது.
தென் ஆசியாவில் இருக்கும் 1.7 பில்லியன் பாடசாலைகளில் பெரும்பாலானவைகளில் பிள்ளைகளுக்கு வசதியான மலசல கூடங்கள் இல்லை. அத்துடன் மாதவிலக்குப் பட்டைகளும் தேவையான அளவுக்குக் கிடைப்பதில்லை. அதனால் பாடசாலை மாணவிகள் தங்கள் மாதவிலக்குக் காலத்தில் வீட்டிலேயே இருந்துவிடுகிறார்கள். அச்சமயத்தில் பெண்கள் “சுத்தமற்றவர்கள்” என்ற பழங்காலக் கருத்தும் பல நாடுகளில் சாதாரணமாக நிறைந்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான பெண்கள் மாதவிலக்குக் காலத்தில் தங்களைக் கழுவிக்கொள்வதில்லை. மேற்கு நேபாளில் அந்த நாட்களில் பெண்கள் வீட்டுக்கு வெளியே ஒரு குடிசையில்தான் தங்கவேண்டும் என்ற வழக்கம் நிலவுகிறது.
கிழக்கு நேபாளத்தில் இருக்கும் சில பிராந்தியங்களில் 170 மாணவர்களுக்கு ஒரு மலசலகூடம்தான் இருக்கிறது என்கிறது அறிக்கை. உலக சுகாதார ஸ்தாபனம் 25 மாணவர்களுக்கு ஒரு மலசலகூடம் இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறது. மற்றக் கிழக்கு ஆசிய நாடுகளும் அந்த எண்ணிக்கையை நிறைவு செய்யவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
“ஒவ்வொரு நாட்டு அரசாரங்கமும் நாட்டிலிருக்கும் ஒவ்வொரு பாடசாலைகளிலும் தேவைக்களவான நீரும், சுகாதாரமான மலசலகூடங்களுக்கும் இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தைக் கொண்டுவரவேண்டும்,” என்கிறார் வோட்டர் எய்டின் உயரதிகாரி.