சிட்னியில் வெளியான யூனியன் கல்லூரின் “தங்கத்தாரகை” – கானா பிரபா
சிட்னியில் தெல்லிப்பழை யூனியன் கல்லுரியின் தங்கத்தாரகை வெளியீடு கண்டது.
யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரின் சிட்னிக் கிளையினர் முன்னெடுப்பில் நேற்று ஞாயிற்றுக் கிழமை
Reg Byrne Community Centre சமூக மையத்தில் “தங்கத் தாரகை” என்ற நூல் வெளியீடு நிகழ்ந்தது.
200 வருடப் பாரம்பரியம் மிக்க தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வரலாற்றுப் பகிர்வுகளைத் தாங்கிய இந்த நூலை எழுதித் தொகுத்தவர் இக் கல்லூரின் முன்னை நாள் அதிபர் கதிர் பாலசுந்தரம் பிள்ளை அவர்கள் ஆவார்.
இந்த நிகழ்வை யூனியன் கல்லூரியின் பழைய மாணவரும், அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திரு அலோசியஸ் ஜெயச்சந்திரா நெறிப்படுத்த,யூனியன் கல்லூரின் பழைய மாணவர் சங்க சிட்னிக் கிளைத் தலைவர் திரு N.சுகிர்தன் அவர்கள் வழி நடத்த, நயப்பை கலாநிதி ஆ.சி.கந்தராசா, கல்லூரியின் பழைய மாணவர் கலாநிதி ம.பிரவீணன், மற்றும் தமிழறிஞர் மற்றும் கல்விச் செயற்பாட்டாளர் திரு திருநந்தகுமார் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
இக் கல்லூரியின் பழைய மாணவர்கள் கலாநிதி ஞானராஜனின் சிறப்பு உரை மற்றும் திரு பெனட் ஹென்றி ஆகியோரின் நன்றியுரையோடு விழா முழுமை கண்டது.
மூத்த எழுத்தாளரும் புலமையாளருமான கவிஞர் அம்பி அவர்கள் முதல் பிரதியைப் பெற்றதோடு யாழ்ப்பாணத்தில் மிஷனரிகளின் சமூகச் செயற்பாட்டின் பன்முகத் தன்மையும் அதன் விளைவாக ஏற்பட்ட நன்மைகளையும் பகிர்ந்து கொண்டார்.
வைத்திய கலாநிதி மனமோகன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், கல்லூரியின் நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள் ஆகியோர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
திரு திருநந்தகுமார் அவர்கள் குறிப்பிட்டது போன்று “தங்கத் தாரகை” என்ற நூல் ஒரு வரலாற்று நாவலைப் படிக்கும் உணர்வை எழுப்பவல்லது.
வரலாற்றுத் தகவல்களை தக்க சமயத்தில் ஆவணப்படுத்திய வகையில் திரு கதிர் பாலசுந்தரம் மற்றும் இந்த முயற்சியில் ஈடுபட்டு நூலை வெளிக் கொணர உதவிய கல்லூரியின் பழைய மாணவர்கள் பலராலும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றே செய்தீர் அதை இன்றே செய்தீர்.
படங்கள் : ஹரன்
யூனியன் கல்லூரி பழைய மாணவர்