TSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெப்பிரவரி மாதம் 24ம் திகதி தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச்சங்க 28 வது நிர்வாகப்பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றபோது அதன் நிறைவாக 2019 ம் ஆண்டுக்கான நிர்வாகப்பொதுக்குழு தெரிவு செய்யப்பட்டது.அதன் தலைவராக கடந்த வருடத்தின் தலைவராக இருந்த சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் திரு சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.செயலாளராக ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர் திரு யோகா தினேஷ் தெரிவு செய்யப்பட்டார். பொருளாளராக கடந்த வருடத்தின் பொருளாளராக இருந்த திருமதி மனோகரி அசோக்குமார் தெரிவு செய்யப்பட்டார்.
உப தலைவர்களாக திரு டேனியல்,திரு பாலமுரளி மற்றும் திரு சுதாகரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட உதவி செயலாளர் மற்றும் உதவி பொருளாளராக முறையே திரு சிவராசா மற்றும் திரு போல் பிரகலாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் 9 நிர்வாக குழு உறுப்பினர்களாக கீதா, பத்மராணி,குலேந்திரன்,ரட்ணராஜா, சற்குணசீலன்,கிருபாகரன், பாலநந்தினி, பிரபாகரன், மற்றும் கமலநேசன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
வெற்றிகரமாக நிறைவு செய்த 2018ம் ஆண்டு பொதுக்குழு தங்கள் கடந்த கால செயற்பாடுகளை விவரித்தது மட்டுமல்லாமல் அதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகளையும் பகிர்ந்துகொண்டனர்.
தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தில் 25 வருடங்களுக்கும் மேலாக கூடுதலான இயங்குதன்மை மிகுந்த பழைய மாணவர் சங்கங்களை அங்கத்துவர்களாக கொண்டு இயங்கும் அமைப்பாகும்.
அண்மைக்காலங்களாக இலங்கையின் பல தமிழ் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் ஐக்கிய இராச்சியத்தில் இயங்க ஆரம்பித்திருக்கும் சூழலில் அவை அனைத்தையும் உள்வாங்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.பல பாடசாலை பழைய மாணவர் சங்கஉறுப்பினர்கள் பலத்த ஆதரவும் உறுதுணையாகவும் வேகமாகவும் செயற்பட பலர் முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு கடந்த வருடத்தில் தென்மராட்சி வலய பாடசாலைகளுக்கான பொது மைதானத்திற்கான கிரிக்கெட் போட்டிகளுக்கு அவசியமான நவீன Score Board வாங்குவதற்கான நிதிப்பங்களிப்பை தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் ஆற்றியிருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது. அதைவிட வருடா வருடம் யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினருக்கு வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டிகளுக்கு நிதிப்பங்காற்றிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த வருடமும் வழமை போல மிகப்பிரமாண்டமாக உதைபந்தாட்ட திருவிழாவும் கிரிக்கெட் கொண்டாட்டமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.