Featured Articlesஉரையாடல்கலை கலாசாரம்பொதுவானவைவெற்றிநடை காணொளிகள்

வாழ்வியலையும் வரலாற்றையும் ஓவியங்களாக ஆவணப்படுத்துவதே என் நோக்கம் – ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன்

செய்திகளையும் கருத்துக்களையும் மிக நுணுக்கமாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல ஒவியங்களால் முடியும் என்பது உண்மையானது.இயற்கையான அமசங்களை மட்டும் அழகு பெற சித்திரமாக கீறி ஓவியர்களாக மக்கள் மத்தியில் இடம்பெறுவதை விட சமகால வாழ்வியல் அம்சங்களையும்,மக்கள் எதிர்கொள்ளும் அத்தனை களங்களையும் ஓவியமாக்கவும் ஒருசில ஓவியர்கள் சளைக்காது ஈடுபடுவார்கள். அவை வரலாற்றில் அவ்வப்போது பேசப்படுவதும் உண்டு.

VetriNadai

அந்த வகையில் அதன் புரிதலை சரியாக உணர்ந்து,நடைமுறை வாழ்வியலையும் வரலாற்று அம்சங்களையும் சித்திரத்தால் ஆவணப்படுத்தும்  எண்ணத்துடன் பயணிக்கும் ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன் அவர்களை வெற்றிநடை சந்திக்கிறது. ஆரம்பத்தில் அவர் பற்றியும் அவர் கடந்து வந்த பாதைகள் பற்றியும் நாம் கேட்டோம்

தன்னுடைய பெயர் பிருந்தாயினி பிரபாகரன் என்று சொல்லி பேச ஆரம்பிக்கிறார் அவர்.கொக்குவிலை பிறப்பிடமாக கொண்டவர்,ஆனாலும் யாழ் நகரில் வசித்து யாழ் இந்து மகளிர் பாடசாலையில் கல்வி கற்றதாக சொன்னார்.கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஓவியத்துறையில் உயர்கல்வி கற்ற அவர் அதே பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக பணியாற்றியதாகவும் குறிப்பிட்டார்.

சமூகத்திலும் வலைத்தளங்களிலும் அவரின் உணர்வு மிகு ஓவியங்களை பார்க்க,ரசிக்க,உணர்ந்துகொள்ளக் கூடியதாக உள்ளதால் அவரிடம் மேலும் பல விடயங்களை கேட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள வெற்றிநடை விளைந்தது.

தனிமனிதனாக ஓவிக்கலையில் அவர் எடுக்கும் முயற்சிகள் பற்றிக்கேட்ட போது:

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனிநபர் ஒவியக்கண்காட்சியை 2016 ம் ஆண்டில் நடாத்தியமை பற்றி குறிப்பிட்டார்.அதே போல் 2018ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்திலும் அவ்வாறானதொரு கண்காட்சியை வெற்றிகரமாக நடாத்தியதாக சொன்னார்.தற்சமயம் யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நிரந்தரமாக தன் ஒவியங்கள் அனைத்தும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் இந்தியா,பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஒன்லைன் மூலமாக இணைந்து ஓவியக் கண்காட்சிகளை நடாத்தியிருப்பதாகவும் பெருமையோடு குறிப்பிட்டிருந்தார்.உண்மையில் பெருமையான விடயந்தான்.

அடுத்த கேள்வி: ஓவியங்களில் எதை வரைய அதிக ஆர்வம்?

அதற்கு தான் வசிக்கும் பிரதேச சுற்றுலா தளங்களை ஓவியமாக்கும் அதேவேளை சமகால ஓவியங்களை படைப்பதிலும் அதிக ஆர்வம் இருப்பதாகச் சொன்னார்.சமகால ஓவியங்களூடாக மக்கள் மத்தியில் எந்தளவுக்கு கருத்துகளை எடுத்துச் செல்ல முடியும் என்பதை அறிந்து அதனூடாக ஓவியங்களை வரைவதாகக் குறிப்பிட்டார்.  பார்க்கும் ஒருவரை விழிப்புணர்வூட்ட முடியும் என்ற நம்பிக்கையோடுதான் ஒவ்வொரு ஓவியங்களும் வரையப்படுகின்றன.சமகால ஒவியங்கள் வர்ணம் உருவத்தொகுப்பு என மாறுபட்டிருந்தாலும் மறைமுகமாக கருத்துப்பரிமாற்றம் பார்வையாளரை சென்றடைவது ஒரு ஓவியராக தமது வெற்றி என்று குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து அடுத்த விடயமாக அவர் வரைந்த ஓவியங்கள் சமூகத்தில் என்ன மாற்றங்களை கொண்டு வரும் என்று நம்புகிறீர்கள் என கேட்ட போது

ஓவியங்கள் என்பன தனியே ஓவியருடன் மட்டுமே சார்ந்திருக்காமல் பாமர மக்களின் எண்ணங்களையும் அவர்களின் உணர்வோட்டங்களையும் கிளர்ந்தெள செய்வதன் மூலம் சமூக மாற்றம் ஒன்றை கொண்டு வரமுடியும் என்று நம்பிக்கையோடு பதிலளித்தார்.

உங்கள் ஓவியங்கள் உண்மையில் என்ன சமூக அம்சங்களை அதிகம் பேசுகிறது என்று தொடர்ந்து வினாவியபோது

மக்கள் படும் அவலங்களையே அதிகம் பேசுவதாகச் சொன்னார்.அதனூடாக அதனை மையப்படுத்திய அரசியலையும் விமர்சிக்க ஓவியங்கள் தவறுவதில்லை என்று சுட்டிக்காட்டினார்.ஆரம்ப காலங்களில் அரசியலில் ஏற்பட்ட பிரச்சினைகளை நேரடியாகவே ஓவியங்கள் விமர்சித்ததாக குறிப்பிட்ட அவர்,தற்காலத்தில் வேறுபட்ட கோணங்களில் ஓவியங்கள் தன்னால் வரையப்படுவதாக குறிப்பிட்டார்.

அடுத்ததாக ஓவியத்துறையில் அவரின் வேறு பங்களிப்புகள் பற்றி கேட்ட போது

சமகாலத்தில் பெயர் சொல்லும் படியாக குறிப்பாக யாழ் மாவட்டத்தில் ஓவியர்கள் பெயர்கள் அருகி வரும் சூழ்நிலையில்,பல ஓவியர்கள் உருவாக்க,வளர்த்தெடுக்கப்பட பாடுபட வேண்டிய காலத்தின் கட்டாயம் பற்றிக் குறிப்பிட்டார்.அவர்களுக்கூடாக சமூக சிந்தனைகள் வெளிப்படக்கூடிய கலையாக்கங்கள் உருவாகி அவை ஆவணப்படுத்த வேண்டும் என்றும் அழுத்தமாகச் சொல்லியிருந்தார்.அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதே தன் ஆர்வம் என்றும் குறிப்பிட்டார்.கருத்து பரிமாற்றத்தை மௌனமாக எடுத்துச் செல்லும் ஊடகமான ஓவியக்கலையை தன் மண்ணில் வளர்த்தெடுக்கும் ஆசையோடு பயணிப்பதாக ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன் மேலும் குறிப்பிட்டார்.

தன் கல்லூரிக்காலத்தில் ஓவியக்கலைக்காக கல்லூரியும் ஆசிரியர்களும் தந்த ஊக்கம் தன்னை இந்த நிலையிலும் தொடர்ந்தும் முன்னேறவும் வழி வகுத்திருப்பதாகச் சொன்னார்.யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை திருமதி சிவகௌரி அவர்கள் கொடுத்த பயிற்சியும் திறனும் மறக்கமுடியாதது என்று குறிப்பிட்டு அவர்களுக்கு தான் என்றும் நன்றிக் கடமைப்பட்டவன் என்று குறிப்பிட்டு வெற்றிநடையின் நேர்காணலிலிருந்து விடைபெற்றார்.

தொடர்ந்தும் பல வெற்றிகள் கண்டு ஒவியத்துறையின் மிகச்சிறந்த கலைஞராக இன்னும் மிளிர வெற்றிநடை ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன் அவர்களை அன்புடன் வாழ்த்துகின்றது .

உரையாடியவர்

வெற்றிநடை யோக தினேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *