“எங்கள் ஆட்சியைக் கவனித்து இஸ்லாமிய ஆட்சியை எப்படி நடத்துவதென்று தலிபான்கள் கற்றுக்கொள்ளலாம்” – கத்தார்
உலக நாடுகளெல்லாம் தலிபான் இயக்கத்தினரை ஒதுக்கிவைத்திருந்தபோது அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு இழுத்து வந்தது கத்தார். ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த பிறகு அவ்வியக்கத்தினரின் நடவடிக்கைகளால் கத்தார் அதிருப்தியடைந்திருப்பதை கத்தாரின் வெளிவிவகார அமைச்சர் வியாழனன்று பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டிருப்பது வெளிப்படுத்துகிறது.
“சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்து வருபவை அதிருப்தியையும் ஏமாற்றத்தையுமே எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களின் பிற்போக்கான நடவடிக்கைகள் ஏமாற்றத்தை உண்டாக்குகின்றன. இஸ்லாமியச் சட்டங்களை நாடுகளில் எப்படி அமுல்படுத்தலாம் என்று நாம் தலிபான்களுக்குப் புரியவைக்க முயற்சித்திருக்கிறோம். பெண்களுக்காக எப்படி முஸ்லீம் சட்டங்களை அமைக்கலாம் என்று சுட்டிக்காட்டியிருக்கிறோம். உதாரணமாக, கத்தார் ஒரு முஸ்லீம் நாடு. எங்கள் நாட்டின் அரச உத்தியோகத்திலும், உயர்கல்வித் தலங்களிலும் ஆண்களைவிடப் பெண்களே அதிகம்,” என்று குறிப்பிட்டார் வெளிநாட்டமைச்சர் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல் – தானி.
சமீப வாரங்களில் தலிபான் இயக்கத்தினர் நாட்டுக்குள் எடுத்துவரும் நடவடிக்கைகள் கத்தார் அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. பெண்களின் உயர்கல்வி தடுப்பு, கொல்லப்பட்டவர்கள் பகிரங்கமாகத் தொங்கவிடப்பட்டவை, உரிமை கோரும் பெண்களின் ஊர்வலங்களில் துப்பாக்கிச்சூடு, பெண்கள் முன்னேற்றத்துக்கான அமைச்சு மூடப்பட்டவை போன்ற நடவடிக்கைகள் சர்வதேச நீரோட்டத்தில் தலிபான்களின் அரசை ஏற்றுக்கொள்ளும்படி கோரிவரும் கத்தாரின் முயற்சிகளுக்கு இடையூறு உண்டாக்குவதாகக் கத்தார் உணர்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்