ஆஸ்ரேலியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக அமைப்பு தனது தாராள வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ஒத்திப்போட்டது.
பிரான்ஸ் – ஆஸ்ரேலியா நீர்மூழ்கிக்கப்பல் வர்த்தக முறிப்பின் எதிரொலி அலைகள் தொடர்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நடக்கவிருந்த ஐ.ஒன்றிய – ஆஸ்ரேலிய வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை ஒத்திப்போடும்படி செய்திருக்கின்றது.
கான்பெராவின் வெளியிடப்பட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தாம் ஆஸ்ரேலியாவுடன் நடத்தவிருந்த 12 வது சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ஒரு மாதத்துக்குத் தள்ளிப் போடுவதாகத் தெரிவிக்கிறது. இரண்டு பகுதியாருக்கும் இடையேயான வருடாந்தர வர்த்தகத்தின் பெறுமதி சுமார் 42.5 டொலராகும்.
ஆஸ்ரேலியா சமீப வருடங்களில் எடுத்த அரசியல் நடவடிக்கைகளுக்காக, தனது முதலாவது வர்த்தகக் கூட்டாளியான சீனாவால் சமீபத்தில் தண்டிக்கப்பட்டு வருகிறது. அச்சமயத்தில் மூன்றாவது பெரும் வர்த்தகக் கூட்டாளியான ஐரோப்பிய ஒன்றியத்துடன் திட்டமிட்டிருக்கும் தாராள வர்த்தக வலயப் பேச்சுவார்த்தையும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம் எடுத்திருக்கும் முடிவைப் ஊதிப் பெரிதாக்காமல் அடக்கி வாசிக்க முற்படுகிறார் ஆஸ்ரேலிய வர்த்தக அமைச்சர் டான் டெஹான். தாம் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகக் கூட்டில் ஆர்வமாக இருப்பதாகவும், தொடர்ந்தும் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்காகத் தயாராவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்