அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் தனது இஸ்ராயேல் விஜயத்தில் அரபு நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கிறார்.
ஆபிரகாம் ஒப்பந்தம் மூலமாக இஸ்ராயேலுடன் நட்பில் இணைந்த நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அண்டனி பிளிங்கன் சனிக்கிழமையன்று இஸ்ராயேலுக்கு விஜயம் செய்திருக்கிறார். ஈரானுடன் அணுசக்தி ஆராய்ச்சி ஒப்பந்தத்தை மீண்டும் கைச்சாத்திடத் தயாராக இருக்கும் அமெரிக்கா அவ்வொப்பந்தம் ஈரானின் பலத்தை மத்திய கிழக்கில் அதிகரிக்கும் என்று விசனப்படும் நாடுகளைச் சந்தித்துச் சமாதானப்படுத்துவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் நாடுகளும், சவூதி அரேபியாவும் கைச்சாத்திடுவதற்குத் தயாராக இருக்கும் ஒப்பந்தத்தில் தமது நாடுகளின் பாதுகாப்புக்கான உத்தரவாதமும் இடம்பெற்றிருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. அவர்களின் பயத்தை நிஜமாக்குவது போல ஈரானின் ஆதரவுடன் யேமனில் போரிட்டுவரும் ஹூத்தி இயக்கத்தினர் எமிரேட்ஸ், சவூதி அரேபியா ஆகிய நாடுகளைத் தாக்குவதுடன் யேமன் நாட்டை அடுத்துள்ள கடற்பகுதியில் போக்குவரத்தையும் ஆபத்தானதாக மாற்றியிருக்கிறார்கள்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை உக்ரேன் மீது ஆக்கிரமித்த ரஷ்யாவைத் தண்டிக்க எடுத்துவரும் பொருளாதார நடவடிக்கைகளில் வளைகுடா நாடுகளின் ஆதரவையும் எதிர்பார்க்கிறது. அவர்கள் தமது எண்ணெய் உறிஞ்சலை அதிகரிப்பதன் மூலம் ரஷ்யாவின் எரிபொருளை உலக நாடுகள் வாங்க மறுப்பதுடன் ஐரோப்பாவுக்குத் தேவையான எரிசக்தியும் கிடைக்கும். அவ்விடயத்தில் இதுவரை முழு மனதுடன் ஒத்துழைக்க மறுத்துவரும் சவூதி அரேபியா, எமிரேட்ஸ் அரசர்களின் மனத்தை மாற்ற வேண்டிய நிலையிலிருக்கிறது அமெரிக்கா.
இஸ்ராயேலின் நெகாவ் பாலைவனப்பகுதியில் நடக்கவிருக்கும் மாநாட்டில் பஹ்ரேன், மொரொக்கோ, எகிப்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை பிளிங்கன் சந்தித்துப் பேசுவார். அதைத்தொடர்ந்து அல்ஜீரியா, மொரொக்கோ ஆகிய நாடுகளில் பயணத்தைத் தொடர்வார். மொரொக்கோவில் அவர் அபுதாபியின் பட்டத்து இளவரசனான முஹம்மது பின் ஸாயித்தையும் சந்திக்கவிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்