லா பால்மா தீவின் பரப்பளவு சில நாட்களுக்குள் அரை விகிதத்தால் அதிகரித்திருக்கிறது.
சுற்றுலா விரும்பிகளின் சொர்க்கமான கானரித் தீவுகளில் பெரிய தீவான லா பால்மாவில் சுமார் ஒரு வாரத்துக்கு முதல் சீற ஆரம்பித்த எரிமலையின் குழம்பு நிலப்பரப்பினூடாக வழிந்து கடலுக்குள் விழுந்துகொண்டிருக்கிறது. 700 சதுர கி.மீ அளவான அத்தீவு சில நாட்களிலேயே 0.5 % ஆல் பெரியதாகியிருக்கிறது.
பரந்த கடற்பரப்புக்குள் கிடக்கும் அது போன்ற தீவுகளின் சரித்திரப் பின்னணியே எரிமலை வெடித்துச் சீறுவதுதான். கடந்த 3 – 4 மில்லியன் வருடங்களில் லா பால்மாவிலிருக்கும் எரிமலைச் சீறலே அத்தீவின் பெருமளவு பரப்புக்குக் காரணமாகும்.
எரிமலைக் குழம்பு நீர்ப்பரப்பை அடைந்து நீருடன் கலக்கும்போது நச்சுவாயுகள் உண்டாகி மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் ஆரோக்கியப் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்பதால் அது பரவ ஆரம்பித்ததுமே வழிந்தோடுவதற்காகக் குழி தோண்டப்பட்டது. ஆனால், தனது வழியில் அகப்பட்டதையெல்லாம் அழித்துக்கொண்டு அக்குழிகளையும் நிரப்பிவிட்டுக் கடற்பரப்பை அடைந்தது எரிமலைக்குழம்பு.
முதலில் ஒரு பிளவினூடாக வழிந்துகொண்டிருந்த தீக்குழம்பு மேலுமொரு வெடிப்பு ஏற்படவே அதனூடாகவும் வழிந்து தற்போது இரண்டு வழிகளூடாகக் கடலினுள் கலந்துகொண்டிருக்கிறது. காற்றின் மூலமாக அதிலிருந்து வரும் நச்சுக்காற்று கடற்பரப்பு வழியாக பரவுவதால் இதுவரை தீவுவாழ் மக்களுக்கு ஆபத்தாக முடியவில்லை.
தீவில் வாழ்பவர்கள் வீட்டுக்கு வெளியே போகவேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டது. கானரி தீவுகள் பாதிக்கப்பட்ட பிராந்தியம் என்று ஸ்பெயினால் அறிவிக்கப்பட்டு, புனருத்தாரண நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 6,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சுமார் 800 கட்டடங்கள் அழிவுக்கு உள்ளாகியிருக்கின்றன.
எரிமலை வெடிக்கச் சில வாரங்களுக்கு முன்னரே தீவையடுத்த பிராந்தியத்தில் மீன்களை பிடிக்க முயன்றபோது எதுவுமே கிடைக்கவில்லையென்று அப்பகுதி மீன்வர்கள் குறிப்பிடுகிறார்கள். இயற்கைச் சீற்றம் பற்றி விலங்குகள் தாமாகவே அறிந்துகொண்டிருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்