ஸ்பெய்ன் தீவொன்றில் வெடித்துச் சிதறி குடியிருப்புக்களை அழித்த எரிமலை மீண்டும் துகிலில்.

ஸ்பெய்னுக்குச் சொந்தமான சுற்றுலாத் தீவுகளிலொன்றான லா பால்மாவில் சில மாதங்களுக்கு முன்னர் துகில் கலைந்து எழுந்த கும்ப்ரே வேய்யா எரிமலையின் சீற்றம் அடங்கிவிட்டதாக ஸ்பெய்ன் அரசு அறிவித்திருக்கிறது. 85 நாட்கள், 8 மணி நேரம் புகை, கற்கள், நச்சு வாயு, எரிமலைக்குழம்பு ஆகியவற்றை உமிழ்ந்த அந்த எரிமலை டிசம்பர் 14 ம் திகதி அடங்கிவிட்டது.

1972 ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக இத்தனை நீண்ட காலம் செயற்பாட்டுடன் இருந்த அந்த எரிமலை சுமார் 3,000 கட்டடங்களை அழித்துவிட்டிருக்கிறது. அவற்றில் 1,345 வீடுகள் ஆகும்.  1,219 ஹெட்டேர் நிலப்பரப்பு அழிந்திருக்கிறது. தீவின் முக்கிய விவசாயங்களிலொன்றான வாழைப்பழத் தோட்டங்கள், திராட்சைத் தோட்டங்கள் ஆகியவையும் பெருமளவில் அழிந்திருக்கின்றன. நல்ல செய்தியாக, எந்த ஒரு மனிதரும், காயமடையவோ, இறக்கவோ இல்லை.

கடலுக்குள் வழிந்தோடிய எரிமலைக்குழம்பு அங்கே 44 சதுர மீற்றர், 5 சதுர மீற்றர் அளவில் இரண்டு நிலப்பரப்புக்களை உண்டாக்கியிருக்கிறது. சுமார் 900 மில்லியன் எவ்ரோக்கள் பெறுமதியான அழிவு ஏற்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. தீவின் அழிந்த பொருளாதார, போக்குவரத்து, சமூக அமைப்புக்களைக் கட்டியெழுப்ப மீண்டும் பல வருடங்களாகலாம் என்று ஸ்பெயின் அரசு குறிப்பிடுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்