ஸ்பெய்ன் கிழக்கிலிருக்கும் வலென்சியா பிராந்தியத்தில் சரித்திரம் காணாத மழையும், வெள்ளமும்.

ஸ்பெய்ன் நாட்டின் வலென்சியா பிராந்தியம் மழையாலும் வெள்ளபெருக்காலும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. நகரின் பாடசாலைகள், நிலக்கீழ் ரயில் போக்குவரத்துகள் மூடப்பட்டிருக்கின்றன. பொதுவாகவே போக்குவரத்துப் பெருமளவில் ஸ்தம்பித்திருக்கிறது. மீட்புப் படையினர் வீதியில் வெள்ளப்பெருக்கில் வாகனத்துடன் மாட்டிக்கொண்ட பலரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். காப்பாற்றச் சென்ற மீட்புப் படையினரின் வாகனமொன்றும் வெள்ளத்துக்குள் மாட்டிக்கொண்டதால் அதையும் காப்பாற்றவேண்டியதாயிற்று என்கின்றன செய்திகள்.

ஸ்பெய்னின் கிழக்குப் பகுதியில் பெலியாரிக் கடலை எல்லையாகக் கொண்டிருக்கிறது வலென்சியா பிராந்தியம். கடந்த 150 வருடங்களில் காணாத அளவுக்கு அங்கே சமீப நாட்களில் மழை கடுமையாகப் பெய்ததாலேயே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. பல வயல்கள் நீருக்குக் கீழே மூழ்கியிருக்கின்றன. 

மே மாத ஆரம்பத்திலிருந்து கடந்த சில நாட்களுக்குள் அப்பிராந்தியத்தில் விழுந்த மழைவீழ்ச்சி மட்டுமே அங்கு ஒரு முழு வருடத்திலும் பெய்யும் மழையை விட அதிகமானது என்கிறது வானிலை ஆராய்ச்சி நிலையம். வரவிருக்கும் நாட்களில் மழைவீழ்ச்சி குறைந்து காலநிலை சாதாரண நிலைக்கு மாறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *