சுமார் 72,000 எவ்ரோவை அருங்காட்சியகத்திடமிருந்து எடுத்து அதையே சித்திரம் என்றார் டனிஷ் கலைஞரொருவர்.

யென்ஸ் ஹானிங் என்ற டனிஷ் சித்திரக் கலைஞர் அருங்காட்சியகமொன்றின் சுமார் 72,000 எவ்ரோவை எடுத்துவிட்டு அதைத் திருப்பிக் கொடுக்க மறுத்து வருகிறார். அதற்குக் காரணமாக “படு மோசமான வேலைத்தளமும், அதிகுறைந்த சம்பளமும்,” என்று காரணம் கூறி வருகிறார்.

Aalborg என்ற நகரின் அருங்காட்சியகமொன்று ஆஸ்திரியா – டென்மார்க் நாடுகளின் தொழிலாளரொருவரின் சராசரி வருமானத்தைக் கலையாகக் காட்ட 534,000 டனிஷ் குரோனரை அவருக்கு அனுப்பி அவைகளை இரண்டு சட்டங்களுக்குள் பொருத்திக் கலைப்பொருளாக ஆக்கும்படி கேட்டிருந்தது. அவரோ அந்தச் சட்டங்களை வெறுமையாகத் திருப்பியனுப்பி “பணத்தை எடுத்துக்கொண்டு ஓடுதல்” [“Take the Money and Run”] என்று அதற்குக் கலைப்பெயர் இட்டிருக்கிறார். அத்தொகையைத் திருப்பியனுப்ப மறுத்து வருகிறார்.

“யென்ஸ் ஹானிங் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி  “பணத்தை எடுத்துக்கொண்டு ஓடுதல்” என்று தனது கலைப்படைப்புக்குப் பெயரிட்டிருப்பதாக எழுதியிருக்கிறார். அவர் ஜனவரி 16.2022 க்கு முன்னர் அத்தொகையை எங்களிடம் திருப்பித் தரவேண்டும் என்று நாங்கள் அவருடன் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அந்த ஒப்பந்தமே தொடர்ந்தும் நிலைக்கிறது,” என்கிறது அருங்காட்சியகம்.

“நான் பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை. அந்தக் கலைபொருளை உண்டாக்க எனக்கு மேலும் 3,300 எவ்ரோ செலவானது. என்னைப் போல மோசமான வேலைத்தளங்களில் மாட்டிக்கொள்பவர்களையும் நான் அறைகூவுகிறேன். நீங்களும் வேலைக்குப் போவதற்காகக் கட்டணம் கோருங்கள்,” என்கிறார் ஹானிங்.

தாம் பொறுத்திருந்து கவனித்துவிட்டுச் ஹானிங் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாக அருங்காட்சியக நிர்வாகி குறிப்பிடுகிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *