நடக்காதது நடந்தால் என்னென்ன நடக்கும்? America Vs North Korea

பதவியிலிருக்கும் ஒரு அமெரிக்க ஜனாதிபதி எவராவது, என்றாவது ஒரு வட கொரிய ஜனாதிபதியைச் சந்தித்ததுண்டா? என்ற கேள்விக்கான பதில் இதுவரை இல்லை என்பதாகவே இருக்கிறது.

ஆனால், பலரையும் வாய்பிளக்கவைக்கும் காரியங்களைச் செய்துகாட்டி வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓரிரு வாரங்களுக்கு முன்பு தான் அதைச் செய்யவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்ததிலிருந்து ‘அது நடக்குமா நடக்காதா,’ என்ற வாக்குவாதம் அரசியல் ஆராய்வாளர்களிடையே நடந்து வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்க வட கொரிய ஜனாதிபதி கிம் யொங்- உன் பக்கத்திலிருந்து விருப்பம் தெரிவிக்கப்பட்டதாகத், தென் கொரியப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வாய் மூலம் அறிவித்தார். இதுவரை எந்த வட கொரிய அரசியல் தரப்பும் அதைப் பற்றி நேரடியாக மூச்சே விடவில்லை. அந்தச் சந்திப்பின் நோக்கம் எதுவென்றும் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால், வட கொரியா சில வாரங்களுக்கு முதல் தனது அணு ஆயுத ஆராய்ச்சி நடவடிக்கைகளை நிறுத்திவிடத் தயார் என்ற அறிவிப்பைச் செய்திருந்ததால் மேற்கண்ட பேச்சுவார்த்தை அறிவிப்பு சர்வதேச அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்ததாக, டிரம்ப் மீதான பல குற்றச்சாட்டுக்களும், டிரம்பின் நெருங்கிய அரசியல் வட்டத்தினர் மீதான வெவ்வேறு குற்றச்சாட்டுக்களும் பல மட்டங்களிலும் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில் “ஆனானப்பட்ட வட கொரிய ஜனாதிபதியே டிரம்ப்புடன் உத்தியோகபூர்வமாகப் பேச விரும்புகிறார்,” என்ற கருத்தை அமெரிக்கர்களிடையே உண்டாக்க வைப்பதற்காக டிரம்ப் சார்பில் பாவிக்கப்படுகிறது.

அதேசமயம் சுவீடனைப் பொறுத்தவரை அப்படியான ஒரு சந்திப்பை நடத்திவைக்கும் இராஜதந்திர முயற்சிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. வியாழனன்று [15.03.2018] வட கொரியாவின் வெளிநாட்டு அமைச்சர் ரி யொங்-ஹூ குறுகிய கால அறிவிப்புடன் ஸ்டொக்ஹோமுக்கு வந்து தனது சுவீடிஷ் சகாவான மார்கொத் வால்ஸ்டிரொமைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். இரண்டு நாட்கள் விஜயமாக அறிவிக்கப்பட்டிருந்த அப்பேச்சுவார்த்தை நீடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் வெளியே தெரிவிக்கப்படாமல் இருக்கும் அதே சமயம் “கொரியப் பிராந்தியத்தில் உண்டாகியிருக்கும் போர் அபாய நிலைமையைத் தவிர்ப்பதற்கான சகல முயற்சிகளையும் சுவீடன் செய்யும். அத்துடன் தேவையானால் அமெரிக்க – வட கொரிய ஜனாதிபதிகள் நேரடியாகச் சந்திப்பதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி அச்சந்திப்புக்கான வரவேற்பு நாடாகவும் சுவீடன் செயற்படத் தயார்,” என்று அறிக்கை விடப்பட்டிருக்கிறது.

உலகில் எத்தனையோ முக்கியமான நாடுகள் இருக்கும்போது ஏன் சுவீடன் இந்தக் காரியத்தில் ஈடுபடுகிறது? என்ற கேள்வி எழலாம்.

உலகின் 164 நாடுகளுடன் வட கொரியா ராஜதந்திர உறவுகளைக் கொண்டிருப்பதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டாலும் 24 நாடுகள்தான் வட கொரியாவில் தங்கள் தூதுவராலயங்களை வைத்திருக்கின்றன. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்ரேலியா, கனடா, பிரான்ஸ் ஆகிய முக்கிய நாடுகள் வட கொரியாவுடன் எந்தவித உத்தியோகபூர்வமான ராஜதந்திரத் தொடர்புகளும் வைத்திருப்பதில்லை.

இவர்களில் ஆஸ்ரேலியா, அமெரிக்கா, கனடா நாடுகளின் [consular protection missions]“தூதரக அலுவலக நடுவராகச் செயற்பட்டு வருகிறது சுவீடன். 1973 முதல் தனது தூதுவராலயத்தை பியூங்யாங்கில் தொடர்ந்து வைத்திருக்கும் சுவீடன் அந்த நாட்டுடன் “நம்பிக்கையான உறவுவலையைக்” கொண்டிருக்கும் ஒரு முக்கிய மேற்குலக நாடாக இயங்கிவருகிறது.

அவ்வுறவைச் சித்தரிக்க ஒரு நிஜமான வியாபார நடப்பு வேடிக்கையாகச் சுட்டிக்காட்டபடுவதுண்டு. 1974 இல் சுவீடனின் வொல்வோ கார் நிறுவனம் தனது 1000 கார்களை வட கொரியாவுக்கு ஏற்றுமதி செய்தது. அந்த 144 வெவ்வேறு வித்தியாசமான கார்களின் விலை 240 மில்லியன் பவுண்டுகள். ஆனால், வட கொரியாவோ அத்தொகையை இன்றுவரை கொடுக்கவில்லை. அவ்வாகனங்கள் பல இப்போதும் வட கொரியாவில் வாடகைக் கார்களாகப் பாவிக்கப்படுகின்றன.

அடாவடித்தனமாக அத்தொகையைக் கொடுக்க மறுக்கும் வட கொரியாவுடன் தொடர்பை முறிக்காமல் அவர்களுடன் ராஜதந்திர உறவுகளுக்காக முடிந்தவரை நட்புடன் நடந்துவருகிறது சுவீடன். அந்த உறவு சுவீடனுக்கு ஆஸ்ரேலிய, கனடிய, அமெரிக்க ராஜதந்திர வட்டாரத்தில் பயன்படுகிறது.

சுவீடனைத் தவிர சுவிஸ் மற்றும் வட – தென் கொரிய எல்லைகளுக்கு நடுவேயிருக்கும் “சமாதானப் பிராந்தியம்” ஆகியவையும் அமெரிக்க – வட கொரிய ஜனாதிபதிகளின் “எதிர்பார்க்கப்படும்” சந்திப்புக்கான இடங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. 2011 இல் நாட்டின் வட கொரிய ஜனாதிபதியான கிம் இதுவரை நாட்டைவிட்டு வெளியேறியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வொல்வோக்களைக் கொடுத்துப் பாராமரிக்கப்படும் உறவு வட கொரிய – அமெரிக்க ஜனாதிபதிகளின் சந்திப்பை நிஜமாக்குமா?, அப்படியொரு சந்திப்பு ஏற்பட்டால் அங்கே வட கொரியா என்னென்ன கோரிக்கைகளை வைக்கப்போன்றது? சந்திப்பு நடந்து அது வெறும் புஸ்வாணமாகிப்போனால் அதை அமெரிக்கா எப்படி எதிர்கொள்ளும்? ஆகிய கேள்விகள் இன்று ஆழமாக விவாதிக்கப்படுகின்றன.

எழுதுவது சாள்ஸ் ஜே போஃமன்

http://www.vetrinadai.com/news/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *