சர்வதேச அரசியலில் கடந்த வாரம்
சர்வதேச அரசியல் வானத்தில் இவ்வாரம் முக்கிய இடத்தைப் பெற்ற விடயம் “டிரம்ப் உறுதியளித்த சிரியா மீதான தாக்குதல் இப்போ வருமா, உடனடியாக வருமா?” என்பதில் ஆரம்பித்தது.
அவ்விடயத்தைத் தொடுவ தற்கு முன்பு சுவீடனில் ஊடகங்கள், அரசியல், சமூகம் என்று சகலத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த ஸ்வென்ஸ்கா அக்கடமி.
நோபல் பரிசுகளைப் பற்றித் தெரிந்திருக்கும் பலருக்கும், அவைகள் யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதை வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வெவ்வேறு அமைப்பினர்கள் தெரிந்தெடுக்கிறார்கள் என்பது தெரியாது. அல்பிரட் நோபலின் விருப்பப்படி இலக்கியத்துக்காக யார் நோபல் பரிசு பெறுகிறார்கள் என்பதை முடிவுசெய்வது ஸ்வென்ஸ்கா அகாடமி. வெவ்வேறு கலைப்பிராந்தியத்தில் முக்கியத்துவரகளான 18 அங்கத்துவர்களைக் கொண்ட அவ்வமைப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் அவர்களது இறப்புவரை அப்பதவியில் இருப்பார்கள்.
ஸ்வென்ஸ்கா அகாடமியின் உள்ளே நடப்பவை எவையும் பகிரங்கத்துக்கு வருவதில்லை என்பது பாரம்பரியம். அதனால் நீண்ட காலமாக அமைப்புக்குள் இருந்தவர்களாலும், அவர்களின் சில உறவினர்களாலும் செய்யப்பட்ட சில பாரிய தவறுகள் அவ்வுறுப்பினரிடையே உண்டான பிளவுகளால் வெளியே ஊடகங்களில் கசியவிடப்பட்டபோது சுவீடன் நாட்டவர்கள் வெட்கமடைந்தார்கள். தவறான முறையில் பணத்தைக் கையாளுதல் முதல் அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரின் கணவர் பல பெண்களுடன் தவறாக நடந்துகொண்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் வெளியாகி சில மாதங்களில் உறுப்பினர்கள் பெரும்பாலானோரும் ஸ்வென்ஸ்கா அகாடமியில் இருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வமைப்பின் சட்டதிட்டங்களை நிர்வகிக்கும் உரிமை 1700 ஆண்டுகளிலிருந்தே சுவீடன் அரசனின் கையில் மட்டும் இருப்பதால் சுவீடனின் அரசன் அமைப்பின் சட்டங்களை 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ப மாற்றியமைக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இவ்வமைப்பு சுவீடன் நாட்டின் விடயமாக இருப்பினும் சர்வதேசத்தில் பிரபலமான நோபலின் இலக்கியத்துக்கான பரிசுக்குரியவரைத் தெரிவுசெய்வதால் இவ்வமைப்புக்குள் இருப்பவர்கள் சுவீடனைச் சேர்ந்தவர்களாக இருப்பது இக்காலத்துக்கு உகந்ததல்ல என்ற கருத்து சுவீடன் உட்பட்ட பல நாட்டின் கலாச்சார முக்கியஸ்தர்களிடையேயும் எழுப்பப்பட்டிருக்கிறது. சுவீடன் அரசர் இவ்வமைப்புக்கான சட்டதிட்டங்களை மாற்றும்போது அமைப்பினுள் சர்வதேச அங்கத்தவர்களையும் நுழையவிடுவதன்மூலம் நோபல் பரிசுகளுக்கான ஆராய்வின் பார்வையை அகலப்படுத்தலாம் என்று பலரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
08.04 அன்று ஹங்கேரியில் நடந்த தேர்தலில் ஆட்சியிலிருந்த Fidesz கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தலையிடி கொடுத்துக்கொண்டிருக்கும் விக்டர் ஒர்பான் மூன்றாவது தடவையும் பிரதமரானார். “அகதிகள், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, ஜோர்ஜ் ஸோரோஸ் ஆகியவை எங்கள் நாட்டுக்குள் ஊடுருவி விடாமலிருக்க என்னுடன் சேர்ந்து போராடுங்கள்,” என்ற ஒர்பானின் தேர்தல் கோஷத்துக்கு மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான [49 %]ஆதரவளித்து மக்கள் எதிர்க்கட்சிகளை மண்கவ்வவைத்திருக்கிறார்கள். நாட்டின் 106 ஒற்றைப் பாராளுமன்ற இடங்களில் 91 ஐ ஆளும் கட்சி அள்ளிக்கொண்டது.
இது ஒர்பானின் மூன்றாவது தேர்தல் வெற்றி. ஹங்கேரியின் பழமைவாதிகள், வலதுசாரிகளைக் கொண்ட ஒர்பானின் அமைப்பின் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து சமூகத்தில் பரவலான சுபீட்சம் உண்டாகியிருக்கிறது. ஒரு காலத்தில் சோசலிஸ்டுகளின் பிடியிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடான ஹங்கேரியிலிருந்து 1990 கள் வரை பலர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக ஓடினார்கள். அப்படிப்பட்ட நாட்டு மக்கள் தங்களுக்கு ஜனநாயக உரிமைகள் கிடைத்தவுடன் ஐரோப்பாவுக்குள் வரும் அகதிகளைத் தங்கள் நாட்டுக்குள் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறாரகள். அரசியல் ரீதியாக அவர்களது குரலுக்கு அடையாளம் கொடுப்பவராக இருக்கிறார் ஒர்பான்.
“முதலீட்டாளர் ஜோர்ஜ் ஸோரோஸ் ஐரோப்பாவையே முஸ்லீம்களால் நிறைப்பதற்கு இரகசியமாகத் திட்டம் போட்டிருக்கிறார்,” என்று சொல்லும் ஒர்பான் ஹங்கேரியில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் குடியேறி வாழும் சர்வதேச ரீதியில் பொருளாதாரம், அரசியல், மனிதாபிமான உதவிகள் ஆகிய விடயங்களில் அறியப்படும் ஸோரோஸ் தான் ஹங்கேரியின் முக்கிய எதிரி என்று குறிப்பிட்டு ஸோரோஸ் ஹங்கேரியில் நடாத்திவரும் கல்வி நிலையங்கள், மனித உரிமை அமைப்புக்கள் சகலத்தின் மீதும் கடும் போர் நடாத்தி வருகிறார். அகதிகள் விடயத்தில் ஒர்பான் காட்டும் கடுமையான போக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மிகப்பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அதே விடயத்தில் ஐ.நா காட்டும் கரிசனையும் ஒர்பானுக்கு எரிச்சலையே உண்டாக்கியிருக்கிறது.
ஹங்கேரி உண்மையிலேயே வெளிநாட்டவர்களை, அகதிகளை வெறுக்கும் நாடா என்று இன்னொரு விதமாகப் பார்த்தால் 2016 வரை கிடைக்கும் விபரங்களைக் கொண்டு அங்கே அந்த ஆண்டுவரை பல்லாயிரக்கணக்கான அகதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். 2016 இல் 23,803 வெளிநாட்டவர்கள் அங்கே குடியேறியிருக்கிறார்கள்.
அதே வருடத்தில் ஹங்கேரியைப் போன்ற இன்னொரு ஐரோப்பிய ஒன்றிய நாடான போர்த்துக்கலில் 15,100 வெளி நாட்டவர்கள் குடியேறியிருக்கிறார்கள். ஹங்கேரியில் ஒர்பான் ஆட்சியமைத்தபின் அகதிகளை ஏற்றுக்கொள்வது குறைவாகினாலும் இன்னொரு பக்கத்தில் ஒர்பான் நாட்டுக்குத் தேவையான தொழில்நுட்பத் திறமைகளுள்ள 20 000 ஆசியர்களை ஹங்கேரியின் நடுத்தர நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யும் அனுமதியை 2013 – 2017 காலத்தில் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.
கணிப்புக்களின்படி 72 விகித ஹங்கேரியர்கள் எதிர்ப்பது இஸ்லாமியர்கள் ஹங்கேரியில் அகதிகளாக வந்து குடியேறுவதே. அவர்களும் ஹங்கேரியில் வாழும் லட்சக்கணக்கான ரோமா இனத்தினரும் [ஜிப்சிகள்] ஒரே விதமான மனப்பாங்குள்ளவர்கள் என்று ஹங்கேரியர்கள் கருதுகிறார்கள். ரோமா இனத்தவர்கள் எப்படியாக ஹங்கேரி மற்றும் அருகிலிருக்கும் நாடுகளான ருமேனியா, பல்கேரியாவில் பெரும்பான்மைச் சமூகத்தினரிடமிருந்து விலகி வித்தியாசமான வாழ்க்கைமுறை வாழ்கிறார்களோ அதேபோலவே முஸ்லீம்களும் ஐரோப்பாவில் குடியேறிய பின்னும் பெரும்பான்மைச் சமூகத்தினருடன் கலக்காமல் தமக்கென்ற உப சமூகங்களையும் அதற்கான வாழ்க்கைமுறைகளையும் வகுத்துக்கொண்டு வாழ்வதால் நாட்டின் பல பகுதிகளில் ஒழுங்கின்மை, சட்டமீறல், தீவிரவாதம் போன்றவை பெருகுவதாகக் குறிப்பிடுகிறது ஒர்பானின் கட்சி.
வென்ற ஆளும்கட்சி ஹங்கேரியில் இவ்விடயத்தில் நடத்தப்போவது எவரும் இதுவரை செய்யாத ஒரு செயல். அகதிகளுக்கு உதவும் அமைப்புக்களின் மீது கடுமையான நடவடிக்கைகளைக் கொண்டுவரும் மசோதா பாராளுமன்றத்தில் ஓரிரு வாரங்களில் கொண்டுவரப்படவிருக்கிறது. ஏற்கனவே நான் குறிப்பிட்டபடி ஆளும்கட்சி மூன்றிலிரண்டு விகிதத்துக்கும் மேலான ஆசனங்களைக் கைப்பற்றியிருப்பதால் அம்மசோதா நிறைவேற்றப்படும் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை.
அகதிகளுக்கு உதவும் நிறுவனங்கள் அதற்காக அரசிடம் அனுமதி வாங்கினால் மட்டுமே செயற்படலாம். அந்த அமைப்புக்கள் அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டால் அவர்கள் தங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் நிதிகளில் 25 விகிதத்தை அரசுக்கு வரியாகச் செலுத்தவேண்டும் என்கிறது அந்த மசோதா.
சிரிய அரசு தனது குடிமக்கள் மீது இரசாயணக் குண்டுகளால் தாக்கியது உண்மைதான், அதற்கு எங்களிடம் நம்பக்கூடிய சாட்சிகள் இருக்கின்றன என்று உறுதியாகச் சொல்லும் பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் மற்றைய மேற்கு நாடுகளுடனும், சவூதி அரேபிய உட்பட்ட மத்திய கிழக்கு நாடுகளுடனும் சேர்ந்து ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் சிரியாவின் மீது விசாரணை நடாத்தவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்போவதாக அறிவித்தன. அதற்காகக் கூட்டப்பட்டச் சந்திப்புக்களில் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தால் அவ்விசாரணைகளை எதிர்த்தது.
திரை மாறியபோது ரஷ்யா நடுநிலையான ஒரு அமைப்பு ஒன்றால் சிரியாவின் மீது விசாரணை நடாத்தப்படவேண்டும் என்று கோரிப் புதிய தீர்மானமொன்றை முன்வைக்க ஏற்கனவே அதைக் கோரிய நாடுகள் எதிர்த்திசையில் திரும்பி ரஷ்யாவின் தீர்மானம் தங்களுக்கு ஒப்பானதல்ல என்று கூறி அதை நிராகரித்தன.
அதே சமயத்தில் வழக்கம்போல முன்னுக்குப் பின் முரணாக டுவீட்டும் டொனால்ட் டிரம்ப் சிரியாவின் மீது தாக்குவதா இல்லையா என்ற விடயத்திலும் எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தார். பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் டிரம்ப்பைக் கட்டாயப்படுத்தி ஒரு வழியாக வெள்ளியன்று சிரியாவின் மீதான தாக்குதல்கள் நடாத்தப்பட்டபோது சிரியா தனது படைகளை சிரியாவிலிருந்த ரஷ்யத் தளங்களுக்கு மாற்றிவிட்டது.
சிரியாவில் விழுந்த குண்டுகள் எல்லாமே அவர்களின் இரசாயண ஆயுதங்கள் தயாரிக்கும் இடங்களில் தாக்கியதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், அவையெல்லாம் சிரியாவின் வெவ்வேறு ஆராய்ச்சி நிலையங்கள் என்கின்றன ஊடகச் செய்திகள். எப்படியோ “நீ அடிக்கிற மாதிரி அடி, நான் திருப்பியடிப்பதாகச் சத்தியம் செய்கிறேன்,” என்று திரைக்குப் பின்னால் பேசி முடிக்கப்பட்டபடி காரியங்கள் நடந்தேற இவ்விடயத்தில் ஈடுபட்ட நாடுகள் எல்லாவற்றுக்கும் இலாபமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 70 டொலர்களுக்குப் போய்விட்டது. ரஷ்யா திருப்பிக் கொடுப்போம் என்று எச்சரிக்கிறது. அதையே சிரியா, ஈரான் ஆகிய நாடுகளும் எதிரொலிக்கின்றன.
அமைதிக்கான நோபலின் பரிசை 2016 இல் பெற்றவர் கொலம்பியாவின் ஜனாதிபதி ஹுவான் மனுவல் சாந்தோஸ். சர்வதேசத்தில் போதைப் பொருட்களுக்காகவும், அதனால் நடாத்தப்படும் கொலைகளுக்காகவும் பெயர் பெற்ற நாடான கொலம்பியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப் போரில் முடிவைக் கொண்டுவரும் ஒப்பந்தத்தைச் செய்திருப்பதற்காக அப்பரிசு அவருக்குக் கொடுக்கப்பட்டது.
நாட்டில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பல இயக்கங்களில் முக்கியமான FARC கெரில்லா இயக்கத்தை பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவந்து அவர்கள் ஜனநாயக வழிப்படி கொலம்பியாவில் மாற ஒத்துக்கொள்ள வைத்தார் ஹுவான் மனுவல் சாந்தோஸ். ஓரளவே வெற்றிகரமாக நடந்த அப்பேச்சுவார்த்தையின் ஒப்பந்தத்தை உடனேயே கொலம்பிய மக்கள் தேர்தலில் ஒத்துக்கொள்ளாவிடினும் படிப்படியாகப் பேச்சுவார்த்தை நடாத்தி அவ்வியக்கத்தினரின் நடவடிக்கைகளை மாற்றலாம் என்ற கருத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இரண்டாவது வருடம் ஆகிவிட்டாலும் பல ஏமாற்றங்களையே கொலம்பிய மக்கள் சந்தித்துக்கொண்டிருக்கிறர்கள்.
அந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியவர்களில் முக்கியமானவர் யேசுஸ் சந்திரிஷ் என்ற FARC இயக்கத் தளபதி. இவரைக் கொலம்பியா அரச வழக்கறிஞரும், அமெரிக்க நீதித்துறையும் சேர்ந்து கைது செய்திருக்கின்றன. இவர் சுமார் 32 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 10 000 கிலோ போதைப்பொருட்களை அமெரிக்காவுக்குக் கடத்த முயன்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தைகளின்படி கொலம்பியாவின் பாராளுமன்றத்தில் இவ்வியக்கத்தினருக்குக் கொடுக்கப்படும் இடங்களில் இவருக்கு ஒரு இடம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
யேசுஸ் சந்திரிஷ் கைதுசெய்யப்பட்டிருப்பது அந்த இயக்கதினரைக் கோபப்படுத்தியிருக்கிறது. தங்கள் இயக்கத்தை பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்க அரசு இக்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருப்பதாக FARC இயக்கத்தினர் குறிப்பிடுகின்றனர். அதே சமயம் இன்னொரு பக்கத்தில் சுமார் 1 200 மாஜி இயக்கத்தினர் அமைதி ஒப்பந்தத்தை ஏற்காமல் நாட்டிலுள்ள மற்றைய ஆயுதந்தாங்கும் இயக்கங்களுடன் சேர்ந்து அரசுக்கெதிராகப் போரில் இறங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஏற்கனவே தேர்தலில் மக்களால் தூக்கியெறியப்பட்டு, இன்னும் நாட்டின் சுமார் முக்கால் பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெறாத, இரண்டு வருடங்களாக இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கும் கொலம்பியாவின் அமைதி ஒப்பந்தத்தில் உயிர் இருக்கிறதா என்ற கேள்வி பல தரப்பிலிருந்தும் எழுப்பப்படுகிறது.