இத்தாலியில் எப்போ அரசு அமையும்?
இத்தாலியில் பொதுத்தேர்தல்கள் முடிந்து சுமார் இரண்டு மாதங்களாகின்றன. தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மையைக் கொடுக்கவில்லை என்பதால் இத்தாலியின் அரசியல் ஸ்தம்பித்த நிலையிலேயே இன்னும் இருக்கிறது.
பாரம்பரிய அரசியலை எதிர்க்கும் M5S கட்சி 32 விகித வாக்குகளைப் பெற, வலதுசாரிகள், நடு நிலை சார்புக் கட்சிகள், இனவாதிகளைக் கொண்ட கூட்டணி 37.4 விகிதத்தைப் பெற, இரண்டு தரப்பினருமே “நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்,” என்று முடிவுகள் வெளியான நாளில் அறிவித்துக்கொண்டார்கள். ஆட்சியிலிருந்த ஜனநாயகக் கட்சிகள் கூட்டணி 23 விகித வாக்குகளைப் பெற்றுத் தாங்கள் தோல்வியுற்றதாக ஒப்புக்கொண்டார்கள்.
ஆனால், நாட்கள் போகப்போக எந்த ஒரு கூட்டணிகளிலும் இருக்கும் எந்த ஒரு கட்சியாலும் மற்றவர்கள் எவருடனும் ஒன்றுபட முடியாததால் அரசாங்கம் அமைப்பது இதுவரை எவராலும் முடியாத காரியமாகவே இருக்கிறது.
கடைசியில் தாங்கள் முழுவதும் வெறுத்த ஜனநாயகக் கட்சிகளின் கூட்டணியுடன் அரசமைக்கப் பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்த M5S கட்சி இன்று பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறாததால் முடிவான செய்தி தர மேலுமொரு வாரம் ஆகலாம் என்று அறிக்கை விட்டிருக்கிறது.