“எனது மரணச் சடங்குகளில் டிரம்ப் பங்குபற்றக்கூடாது!”
அரிசோனாவின் செனட்டரான ரிப்பப்ளிகன் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெய்ன் மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் அதிகமாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.
மரணத்தை மிக விரைவில் எதிர்நோக்கும் மக்கெய்னுக்கும் ஜனாதிபதி டிரம்புக்கும் மனக்கசப்புக்கள் இருக்கின்றன. அதனால், தனது மரணச் சடங்குகளில் டொனால்ட் டிரம்ப்புக்குப் பதிலாக வெள்ளை மாளிகையின் சார்பில் உப ஜனாதிபதி மைக் பென்ஸ் கலந்துகொள்ளவேண்டும் என்று ஜோன் மக்கெய்ன் விரும்புவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது அரசியல் ஞாபகங்களை எழுதிக்கொண்டிருக்கும் மக்கெய்ன் தான் ஜனாதிபதியாக ஒபாமாவுக்கெதிராகப் போட்டியிட்டபோது தனது உப ஜனாதிபதி வேட்பாளராக சாரா பெலினைத் தேர்ந்தெடுத்ததைக் குறித்து விசனப்படுவதாகக் குறிப்பிடுகிறார்.
வியட்நாம் போரில் ஈடுபட்ட மக்கெய்ன் எதிர்த்தரப்பால் கைதுசெய்யப்பட்டுப் போர்க் கைதியாக இருந்ததால் அவர் ஒரு உண்மையான போர்வீரரல்ல என்று டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகத் தனது ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் சொன்னதால் இருவருக்கும் இடையே உறவுகள் முறிந்துபோயின.