இந்தோனேசியாவில் தேவாலயங்களில் குண்டுகள்
இந்தோனேசியாவில் ஜாவாவின் கிழக்கில் கடலோரமாக இருக்கும் சுரபாயா நகரில் மூன்று கிறீஸ்தவ தேவாலயங்கள் குண்டுகளால் தாக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்பத் தகவல்கள் சுமார் 10 பேர் இறந்ததாகவும் சுமார் 30 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கின்றன.
தேவாலயங்கலின் ஞாயிறுப் பூசைக்கு வந்தவர்கள் மீதே மனித வெடிகுண்டுகளால் இத்தாக்குதல்கள் சுமார் 10 நிமிடங்களுக்குள் நடாத்தப்பட்டிருக்கின்றன. நான்காவதாக இன்னொரு தேவாலயமும் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற செய்தி பதட்டமான நிலையிலிருக்கும் நகரில் நிலவுகிறது.
இன்றைய தினத்தில் தேவாலயங்களில் நடைபெறவிருந்த உணவு பரிமாறும் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டு எல்லாத் தேவாலயங்களையும் இன்று பூட்டுமாறு நாட்டின் பொலீஸ் பணித்துள்ளது.
ஒரு சில நாட்களுக்கு முன்பு ஜாகர்த்தாவின் எல்லையிலிருக்கும் சிறையொன்றில் கைதிகளிடையே சச்சரவுகள் உண்டாகி, காவலர்களுடன் கைகலப்புக்கள் மூண்டன. அச்சமயத்தில் இந்தோனேசியாவின் பிரத்தியேக பொலீஸ் பாதுகாப்புப் படையின் ஐந்து வீரர்களும் கொல்லப்பட்டார்கள். ஐ.எஸ் அமைப்பு அந்தத் தாக்குதலை நடாத்தியதாகத் தெரியவருகிறது.