காஸா எல்லைக்குப் போகும் ஹமாஸ் தலைவர்
காஸாவின் இஸ்ராயேல் எல்லையில் சுமார் ஏழு வாரங்களாக நடத்தப்பட்டுவந்த எதிர்ப்புப் பேரணிகளைத் தனதாக்கிப் பல இளவயதினரை இஸ்ராயேலின் இராணுவத்துக்குக் காவு கொடுத்தார்கள் ஹமாஸ் இயக்கத்தினர்.
அதன் உச்சக்கட்டமாக ஜெருசலேமில் அமெரிக்கத் தூதுவராலயம் திறக்கப்பட்ட திங்களன்று 60 பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆயிரத்துக்கும் மேலானோர் காயமுற்றனர்.
சர்வதேசத்துக்குக் காட்டுவதற்காக வேண்டுமென்றே காஸாவின் இளையவர்களைக் ஹமாஸ் தூண்டிக் கொலைக்கு அனுப்பியதைத் தவிர வேறெந்த நன்மையும் அதனால் விளையவில்லை என்ற கருத்தே பெரும்பாலானோர்களிடம் நிலவிவருகிறது. இஸ்ராயேலோ, எங்கள் எல்லையைக் காக்கத் தயங்கமாட்டோம், முடிந்தளவும் கொலைகள் நடக்காமல் கவனித்துக்கொண்டோம் என்கிறது.
திங்களன்று நடந்த துப்பாக்கிச் சூடுகள் பற்றிய விசாரணை நடாத்தப்படவேண்டும், காஸா பிராந்திய எல்லையில் ஐ.நா வின் அமைதி காப்புப் படை நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் ஐ.நா வில் எழுப்பப்பட்டிருக்கின்றன.
காஸாவின் அடுத்த பக்கத்தில் இருக்கும் எகிப்து தனது எல்லைகளை ரமழான் மாதம் முடியும் வரை திறந்துவிட முன்வந்திருக்கிறது. அதன் காரணம் ஹமாஸ் தனது பேரணிகளைக் கைவிட எகிப்திடம் ஒத்துக்கொண்டு ஒப்பந்தம் செய்திருக்கிறது என்ற கருத்து எழுந்தது.
“நாம் போராட்டத்தை நிறுத்துவதாக எகிப்திடம் வாக்குக் கொடுக்கவில்லை, தொடர்ந்து எல்லைப் போராட்டம் வரவிருக்கும் வெள்ளிக்கிழமை நடக்கும்,” என்று ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹன்யா அறிவித்திருக்கிறார்.
“வரும் வெள்ளிக்கிழமைப் போராட்டத்தில் முதல் வரியில் நான் பங்குகொள்வேன்,” என்று உறுதியளித்திருக்கிறார் இஸ்மாயில் ஹன்யா. திங்களன்று நடந்த போராட்டத்தின் பின்பு அவ்வெல்லையில் அணிதிரள்வோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருப்பதாகப் பல ஊடகங்களும் அறிவிக்கின்றன.