வேகமாக உயரும் எண்ணெய் விலை
ஒபெக் அமைப்புக்குள்ளும் வெளியே இருக்கும் நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு இன்றுத் தேவையான எண்ணெயைச் சந்தைக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக சவூதி அரேபியா அறிவித்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு உலகச் சந்தையில் எண்ணெய் விலை விழுந்துகொண்டிருப்பதைத் தடுக்க சவூதி அரேபியா மிகவும் பிரயத்தனப்பட்டுப் ரஷ்யா உட்பட்ட பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தித் தமது எண்ணெய்த் தயாரிப்பைக் குறைத்துக்கொண்டன. இதன் விளைவாகவே சர்வதேசச் சந்தையில் தொடர்ந்து பெற்றோலியத்தின் விலை அதிகரித்து வருகிறது.
அதே சமயம் ஈரானுடன் அமெரிக்கா உட்பட்ட நாடுகள் செய்துகொண்ட அணுத் தொழில் நுட்ப ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டு ஈரானிடம் வர்த்தகம் செய்யும் நாடுகளைத் தண்டிக்கப்போவதாக அறிவித்திருப்பதால் ஈரான் உலகச் சந்தைக்குத் தொடர்ந்தும் எண்ணெயை வழங்குமா என்பதில் சந்தேகம் உண்டாகியிருக்கிறது.
தனது பொருளாதார அபிவிருத்திக்குப் பெற்றோலியச் சக்தியில் தங்கியிருக்கும் வளரும் நாடான இந்தியா தற்போது எண்ணெய் பீப்பாய் 80 டொலராக உயர்ந்துவிட்டது பற்றிச் சவூதி அரேபியாவிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்.