ஈராக்கிய தேர்தல் முடிவுகள்
அமெரிக்க ஆதரவாளரும், ஈரானின் அரசியல் ஈராக்குக்குள் நுழைவதை விரும்பாதவருமான ஷீயா – இஸ்லாம் மார்க்கத் தலைவரான மொக்தடா அல்-சாதிர் அணி கடந்த வாரம் ஈராக்கில் நடந்த பொதுத் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்படுகிறது.
அல்-சாதிர் அணியினரின் 54 இடங்களுக்கு அடுத்ததாக ஈரான் ஆதரவு அரசியல் அணி 47 இடங்களையும், ஈராக் பிரதமரின் அரசியல் அணி 42 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. ஆன்மீகத் தலைவரான அல்-சாதிர் வேட்பாளராக எத் தொகுதியிலும் நிற்காததால் அவர் பிரதமராகப் பதவியேற்க இயலாது. பதிலாகத் தனக்கு ஆதரவான ஒருவரைப் புதிய பிரதமராக நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியிலிருந்தவர்கள் தோற்று மூன்றாவது இடத்துக்கு வந்ததும், ஈரானிய ஆதரவுடன் அமெரிக்காவை எதிர்த்த ஷீயா மார்க்கத்தினரின் அணி இரண்டாவது இடத்தைத்தான் பெறமுடிந்ததுமான தேர்தல் முடிவுகள் பலராலும் எதிர்பார்க்க முடியாதவையாக இருக்கின்றன. கடந்த அரசாங்கம் ஸ்தம்பித்து இருந்ததும், அவற்றினுள் பலர் லஞ்ச ஊழல்களில் ஈடுபட்டு இருந்ததாகப் பெரும்பாலானவர்கள் கருதியதும் இம்முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.