ஐரோப்பிய ஒன்றிய அமெரிக்க வர்த்தகப் போர்
ஈரானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளரான ஐரோப்பிய ஒன்றியம் 2015 ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஈரானுடன் செய்துகொண்ட அணுத் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் ஈரான் தொடரத் தயாராக இருப்பின் ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைத் தொடரத் தயாராக இருப்பதில் உறுதியாக இருப்பதாக அறிவிக்கிறது. அதன்மூலம் 08.05 இல் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்கா அதே ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும் அதை மீறும் நாடுகளின் மீது வர்த்தகத் தடை விதிக்கும் என்று அறிவித்ததை மீறிச் சவால்விடவும் ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
“ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஷோன் கிளைவுட் யுங்கர் ஈரானிய எண்ணெய் விற்பனைக்கான விலையை எப்படி ஈரானிய வங்கிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் என்பதற்கான வழியை முன்வைத்துள்ளார். அதன்படி ஐரோப்பிய ஒன்றியம் ஈரானிய மத்திய வங்கிக்கு நேரடியாக அத்தொகைகளைக் கொடுக்கும். அதேபோலவே ஈரானிய மத்திய வங்கி ஐரோப்பிய நிறுவனங்களுடன் செய்துகொள்ளும் வர்த்தகத் தொகைகளும் கையாளப்படும். அதன்மூலம் அமெரிக்கா ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைச் செய்யும் நிறுவனங்களைத் தண்டிக்க இயலாது.” என்ற அறிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஈரானிய வெளிநாட்டமைச்சர் ஐரோப்பிய உயர்மட்டத் தலைவர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் பின்பு பல்கேரியாவில் ஸோபியா நகரில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் மாநாட்டில் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
அதே சமயம் அமெரிக்காவின் மத்திய வங்கி ஈரானிய வங்கிகளின் உயரதிகாரிகளின் மீது புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது.