அமெரிக்க – சீன வர்த்தகப் போர் ஒத்திவைப்பு
இரண்டு நாட்களாக சீன – அமெரிக்க வர்த்தகம் பற்றிய உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின் பின்பு “நாம் எமது பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் கண்டிருப்பதால் எங்களுக்குள் ஆரம்பிக்கவிருந்த வர்த்தகப் போரை இப்போதைக்குத் தள்ளிவைத்திருக்கிறோம்,” என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்டீவன் ம்னூச்சன் தெரிவித்திருக்கிறார்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தற்போதுள்ள வர்த்தகத்தில் சீனாவுடைய உபரி மதிப்பைக் குறைக்க சீனா முழுவதுமாக ஒத்துக்கொள்ளாவிடினும், காலப்போக்கில் அமெரிக்காவின் பொருட்களைச் சீனா வாங்குவதை அதிகரிக்கும் விதமான நடவடிக்கைகளில் பேச்சுவார்த்தை நகர்வதாக அவர் தெரிவித்தார்.
சில வாரங்களுக்கு முன்பு சீனாவிடமிருந்து அமெரிக்கா இறக்கும்தை செய்யும் பொருட்களின் மீது சுமார் 150 பில்லியன் டொலர்கள் பெருமதியான உபரி வரிகளைப் போடப்போவதாக டிரம் அறிவித்திருந்தார். அவைகளை இப்போதைக்குத் தள்ளிப்போட்டிருப்பதாகவும் ஸ்டீவன் ம்னூச்சன் தெரிவித்திருக்கிறார்.
இவ்வாண்டில் மட்டும் அமெரிக்காவின் விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்வதை 35- 40 விகிதத்தால் சீனா அதிகரிக்கும் என்றும், மேலும் மூன்று முதல் நான்கு வருடங்களில் சீனா அமெரிக்காவின் சக்திப் பொருட்கள் வாங்குவதை 50 – 60 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
உலக வர்த்தக வல்லுனர்கள் இந்த அறிவிப்பு உலகின் இரண்டு முக்கிய வர்த்தகச் சக்திகளிடையே தற்போது ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளைக் குறைத்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.