ஐரோப்பிய ஒன்றியம் மீது ஈரான் அதிருப்தி
அமெரிக்கா கைகழுவிவிட்ட ஈரானின் அணுத் தொழில் நுட்ப ஒப்பந்தத்தைப் பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் செய்வது போதாது என்று குற்றம் சாட்டுகிறார் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் முஹம்மது யவாத் ஷரிப். இதை அவர் ஈரானில் தன்னைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய மின்சக்தி தலைவரிடம் தெரிவித்தார்.
“அந்த ஒப்பந்தத்தை நாம் தொடர்ந்து பேணவேண்டும். அதன்மூலம் இன்னொரு ஒப்பந்தம் உருவாக்கும் தேவை இல்லாது போகும். ஈரானுடனான ஒப்பந்தம் வேலை செய்கிறது என்பதே எங்கள் தெளிவான கருத்து,” என்கிறார் ஐரோப்பிய ஒன்றிய மின்சக்தி தலைவர் ஆரியாஸ் கனாதே.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுமையான ஆதரவு கிட்டும் பட்சத்தில் ஈரான் மீண்டும் தனது அணுசக்தி ஆயுத ஆராய்சிகளைத் தொடங்காமல் இருக்க ஒத்துக்கொள்கிறது. ஆனால், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களைத் தண்டிப்பதாக அமெரிக்கா எச்சரித்திருப்பதால் பல நிறுவனங்கள் ஈரானுடனான தங்கள் வர்த்தக உடன்படிக்கைகளிலிருந்து பின்வாங்க இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன. அதனால், ஈரானிய அரசு ஐரோப்பிய ஒன்றியம் தலையிட்டு அந்த நிறுவனங்களைப் பின்வாங்காமல் தொடர்ந்தும் தம்முடன் வியாபாரங்கள் செய்யவைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.