இத்தாலியில் அரசாங்கம் அமையலாம்
இத்தாலியில் எதிரும் புதிருமாக நின்றுகொண்டிருந்த கட்சிகள் ஒரு வழியாகப் புதிய தேர்தலொன்றை எதிர்நோக்காமல் அரசொன்றை அமைக்க ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். குசேப்பெ கொண்டே என்ற 54 வயதான, அதிக பிரபலமில்லாத சட்ட வல்லுனர் ஒருவரை நடந்த தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறாத கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமராகப் பிரேரிக்கின்றன.
குசேப்பெயைப் பிரதமராக அங்கீகரிப்பது பற்றி பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளின் முக்கியத்தஸ்தர்களுடனும் நாட்டின் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறார். இத்தாலியின் புதுக் கட்சியும், வலது சாரி நிறவாதக் கட்சிகளின் அணியும் சேர்ந்தே புதிய அரசு அமைப்பதில் முயற்சி செய்து வருகின்றன.
இவ்விரு கட்சிகளுக்கும் ஒற்றுமையான ஒரு முக்கிய கோட்பாடு ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு ஆகும். எனவே இவர்களது அரசாங்க அமைப்பைப் பற்றி ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்கள் எச்சரித்து வருகிறார்கள்.