இத்தாலிய அரசியலில் தொடரும் சர்ச்சைகள்!
இத்தாலியத் தேர்தலில் வெற்றிபெற்ற இரண்டு அணிகளினால் பிரதமராகப் பிரேரணை செய்யப்பட்ட பலரால் அறியப்படாத சட்ட வல்லுனர் குயிசெப்பே கொம்தெ தான் பெற்றிராத சர்வதேசப் பட்டங்களைப் பொய்யாகக் குறிப்பிட்டதாகக் குற்றஞ்சுமத்தப்படுகிறார்.
பாரம்பரிய அரசியல் கட்சிகளை எதிர்த்துத் தொடங்கப்பட்ட 5 நட்சத்திர அமைப்பே கொம்தெயைப் பிரதமராக முதலில் பிரேரித்தது. கேம்பிரிட்ஜ், பரிஸ் ஸொர்போன், நியூ யோர்க் பல்கலைக்கழகங்களில் கொம்தெ சட்ட வல்லுனர் பட்டங்கள் பெற்றதாகக் கூறப்படுவது உண்மையா என்பது பற்றிய சந்தேகம் பலராலும் எழுப்பப்படுகிறது.
நியூ யோர்க் பல்கலைக்கழகம் கொம்தெ என்ற பெயரில் அங்கே எவரும் கற்றதில்லை என்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கொம்தெ பட்டம் பெற்றதாகக் குறிப்பிடப்படும் வருடத்தில் பல்கலைக்கழகத்தில் ஏதாவது செய்தாரா என்பதைப் பற்றி விபரங்கள் தெரிவிக்க மறுக்கிறது.
5 நட்சத்திர அமைப்பின் தலைவர்கள் தாங்கள் கொம்தெயின் பட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டதை ஊடகங்கள் தவறாகப் புரிந்துகொண்டதாகச் சொல்லி மழுப்ப முனைகிறார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தேர்தல் முடிவுகள் வந்தும் அரசங்கம் அமைக்காத இத்தாலியின் பொருளாதாரம் இதே சமயத்தில் ஸ்திரமில்லாத காரணத்தால் சர்வதேச ரீதியில் தளம்பிக்கொண்டிருக்கிறது. நாட்டின் வெளிநாட்டுக் கடன்களும் அதற்கான வட்டிகளும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.
இன்று புதன்கிழமை இத்தாலிய ஜனாதிபதி கொம்தெயைப் பிரதமராக அங்கீகரிப்பது பற்றிய தனது முடிவைத் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.