பெண்ணுரிமைப் போராளிகள் சவூதியில் கைது
கடந்த இரண்டு வாரங்களாக சவூதி அரேபியாவில் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிவரும் பெண்கள் கைது செய்யப்பட்டு வருவதாக அம்னெஸ்டி உட்பட்ட மனிதாபிமான அமைப்புக்கள் குற்றஞ்சாட்டி வந்தன. சவூதிய அரச குடும்பத்துக்கு எதிராகக் குரலெழுப்பி வருபவர்களையே இப்படிக் கைது செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் சில பெண்ணுரிமை அமைப்பின் அங்கத்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதும் தடை செய்யப்பட்டிருக்கிறது.
கைதுகளைச் செய்தவர்கள் சவூதிய அரசன், இளவரசன் ஆகியோருக்குக் கீழே பணியிலிருக்கும் பிரத்தியேகக் காவலர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. பெண்களுக்கான உரிமைகள் பலவற்றை அனுமதிக்கப் போவதாகத் தனது சர்வதேசப் பேட்டிகளில் பகிரங்கமாக அறிவித்த இளவரசர் முஹம்மது பின் சல்மான் இக்கைதுகளுக்குப் பின்னணியில் இருப்பதாகவே கருதப்படுகிறது. அதனால் விரைவில் அனுமதிக்கப்பட இருக்கும் பெண்கள் காரோட்ட அனுமதி போன்றவை உண்மைதானா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
எனினும் 24.05 வியாழனன்று கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்கள் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறவர்கள் யாருடனும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் எதற்காகக் கைது செய்யப்பட்டார்கள் என்ற விபரங்களும் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்படவில்லை.