உதயமாகிறது அயர்லாந்து தமிழ் கல்விக்கழகம்
உலகமெங்கும் பரவியிருக்கும் தமிழர்களின் குழந்தைகள் செவ்வனே தமிழ்மொழித்தேர்ச்சி பெற உலகின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ் பாடசாலைகளின் உருவாக்கம் மிக முக்கிய பங்களிக்கிறது. அதனடிப்படையில் ஒக்ரோபர் மாதம் 18ம் திகதியாகிய இன்று அயர்லாந்து தமிழ்க் கல்ல்விக்கழகம் உதயமாகின்றது. அயர்லாந்து நேரம் மாலை நான்குமணிக்கு இணைய வழி ஆரம்ப கொண்டாட்டமாக தன் பணியை ஆரம்பிக்கத் தொடங்குகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கல்வியலாளர்கள்,பேராசிரியர்கள்,தமிழ்ச் சங்க தலைவர்கள் எனப்பலர் தங்கள் வாழ்த்துச்செய்திகளை இணைய வழி ஒரே நேரத்தில் பகிர்வதற்கு தயாராகின்றனர்.
விழாவுக்கு முன்னிலையாக மதுரை தமிழ் சங்க தலைவர் முனைவர் ப.அன்புச்செழியன் அவர்கள் பங்கேற்க சிறப்புரையை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ் கல்வித்துறையின் துறைத்தலைவர் பேராசிரியர். முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் அவர்கள் ஆற்றவுள்ளார்.அவரோடு இணைந்து அயர்லாந்தில் அமைந்துள்ள mother Tounges அமைப்பின் நிறுவுனரும் ஆரம்பகர்த்தாவுமாகிய பேராசிரியர் முனைவர் பிரான்சிஸ்கோ அவர்களும் சிறப்புரையை ஆற்றவுள்ளார்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் வாளோடு தோன்றிய தமிழ்க்குடியின் தாய் மொழி, அகத்தியர், தொல்காப்பியர், ஒளவை மூதாட்டியார், திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள் முதற் கொண்டு, ஆயிரக் கணக்கான தமிழ்ப் புலவர்களாலும், கவிஞர்களாலும், அறிந்களாலும் செறிவூட்டப்பட்டது தமிழ் மொழி.இந்த மொழியை கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற நம் மூத்தோர் முதுமொழிக்கேற்ப, தமிழ் மொழியின் வளம், இலக்கிய ஆழம், அதன் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து நாம் ஒவ்வொருவரும் கற்க வேண்டியது ஏராளம்.உயர்தனிச் செம்மொழியான தமிழைக் கற்க விரும்பும் குழந்தைகள், இளையோர், வயது வந்தோர் என யாவருக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் தலையாய பணியை ஆரம்பிக்கும் அயர்லாந்து தமிழ் கல்விக்கழகத்துக்கு மேலும் சிறப்பான அரப்பணிகளோடு சிறந்து விளங்க வெற்றிநடை அன்புடன் வாழ்த்துகிறது.