பாகிஸ்தானின் கண்களைக் கவரும் கலையொன்று வானத்தை எட்டுகிறது.
பாரவண்டிகளில் அழகழகாகக் கண்களைக் கவரும் நிறங்களால் சித்திரங்களை வரைந்து எங்கு சென்றாலும் அவற்றைத் திரும்பிப்பார்க்கவைக்கச் செய்யும் “truck art” பாகிஸ்தானியர்களுக்கே உரியது என்றால் அது மிகையல்ல.
உலகின் பல நாடுகளிலும் அவ்வழகைத் தீட்டியிருக்கும் பாரவண்டி ஒன்றைக் காண நேர்ந்தால் அதன் ஓட்டுனரோ, உரிமையாளரோ பாகிஸ்தானியராக இருப்பாரென்பதை ஊகித்துவிடலாம். பல வருடங்களாகவே அவர்களிடையே ஊறிப்போய்விட்ட அந்தக் கலையை பல மேல் நாட்டு நகரங்களிலும் கண்காட்சியாக வைத்திருக்கிறார்கள் பல கலைஞர்கள். அந்தக் கலைக் சமீப வருடங்களில் பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான ஏற்றுமதிப் பொருளாகவும் ஆகியிருக்கிறது. யுனெஸ்கோ நிறுவனம் அக்கலையை அந்தந்தப் பிராந்தியச் சித்திரங்களுடன் இணைத்து வரைந்து கல்வியில் பின்தங்கிய பிராந்தியங்களில் பெண்களைக் கல்விக்கூடங்களுக்கு ஈர்ப்பதற்காகப் பயன்படுத்துகிறது.
தற்போது கனடாவைச் சேர்ந்த விமானிகளுக்குக் கற்பிக்கும் நிறுவனமொன்று தனது சிறிய விமானங்களிரண்டை பாகிஸ்தானியப் பாரவண்டிக்கலைச் சித்திரங்களால் வரைந்து பாவிக்கத் தீர்மானித்திருக்கிறது. “பாகிஸ்தான் என்றால் பொருளாதார ஏமாற்றுக்களுக்கும், தீவிரவாதத்துக்கும் மட்டும் சின்னமாக இருக்கலாகாது,” என்று அந்த நிறுவன அதிகாரியொருவர் குறிப்பிடுகிறார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஹைதர் அலி என்பவர் அந்த விமானங்களைச் சித்திரங்களால் அலங்கரிப்பதற்காகப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார். “என்றாவது ஒரு நாள் ஒரு ஜெட் அல்லது போயிங் விமானத்தை எனது சித்திரங்களால் அலங்கரிப்பதே எனது கனவு,” என்று குறிப்பிடும் அலி அக்கலையைத் தனது தந்தையாரிடமிருந்து கற்றிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்