‘மொடர்னா’ ஊசியும் பாவனைக்கு! பிரான்ஸில் 38 வீதமானோரே தடுப்பூசி ஏற்ற சம்மதம்!
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அமெரிக்காவின் மற்றொரு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான ‘மொடர்னா’ (Moderna) ஊசி பாவனைக்கு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மருத்துவ முகவரகம் ‘மொடர்னா’ தடுப்பூசியை அதன் ஒன்றிய நாடுகளில் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நாடுகளில் ஏற்கனவே அமெரிக்கா-ஜேர்மனி கூட்டு நிறுவனத்தின் ‘பைசர்-பயோஎன்ரெக்’ தடுப்பூசி பாவனைக்கு வந்துள்ளது. அடுத்துவரும் நாட்களில் மொடெனா தடுப்பு மருந்தும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
மொடர்னா தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் பிரான்ஸில் உள்ள அதன் தொழிற்சாலையிலும் நடைபெறவுள்ளன.இதேவேளை,இரண்டு தடுப்பூசிகள் பாவனைக்கு வந்துள்ள பிறகும் அவற்றின் மீது மக்களுக்கு இன்னமும் நம்பிக்கை ஏற்படவில்லை.
பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்றில் இன்று வெளியாகிய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி 38 வீதமானவர்கள் மட்டுமே தடுப்பூசி ஏற்றிக்கொள்ள ஆர்வமாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 45 வீதமானவர்கள் தடுப்பூசியை மறுத்துள்ளனர். 17 வீதமானோர் போடுவதா விடுவதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.இளவயதினரே தடுப்பூசி ஏற்ற மறுப்பவர்களில் பெரும் பங்கினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி ஏற்றும் திட்டங்கள் தொடர்பான விவரங்களை அறிவிப்பதற்காக பிரதமர்Jean Castex நாளை மாலை ஆறு மணிக்கு செய்தியாளர் மாநாட்டை கூட்டவுள்ளார்.
அதற்கு முதல் நாளான இன்று புதன்கிழமை நாடெங்கும் 25 ஆயிரத்து 379 புதிய தொற்றுக்கள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. 24 மணிநேரத்தில் 291 மரணங்களும் பதிவாகி உள்ளன.
குமாரதாஸன். பாரிஸ்.