ஜார்கண்ட் மாநிலப் பாடசாலை அதிபரொருவர் கிராமத்துச் சுவர்களில் கல்வியறிவூட்டும் சித்திரங்களை வரைகிறார்.
கொரோனாக் கட்டுப்பாடுகளால் நாடு, நகரங்களெல்லாம் முடக்கப்பட்டிருந்த காலத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள கிராமத்துச் சிறார்களின் படிப்பு நிலைமை அவர்களின் வயதையொத்த மற்றச் சிறார்களின் நிலையைவிட மோசமாகியிருக்கிறது.
சாதாரணமான நிலைமையில் இந்திய அரசின் “அங்கன்வாடி மையங்களில்” சென்று அடிப்படை ஆரம்பக் கல்வி, ஊட்டச்சத்துணவு போன்றவைகளைப் பெற்றுவரும் கிராமத்து ஏழைப் பிள்ளைகளுக்கு கொரோனாக் கட்டுப்பாடுகளின் காலத்தில் அவைகளும் பூட்டப்பட்டிருந்ததால் வாழ்வே இருட்டாகியது. அச்சமயத்தில் அவர்களுக்கும் எதையாவது செய்து உதவவேண்டும் என்று நினைத்தார் ஷியாம் கிஷோர் காந்தி. அவர் பங்காத்தி உக்ரமித் மத்திய வித்தியாலம் என்ற பாடசாலையின் அதிபராகும்.
இந்தியாவின் பல பாகங்களிலும் இதே கொரோனாக்கட்டுப்பாட்டுக் காலத்தில் பிரபலமாகியிருக்கும் மொஹல்லா வகுப்புகள் என்று குறிப்பிடப்படும் நடமாடும் வகுப்புக்களையும் இவரே தான் முதன் முதலில் ஆரம்பித்துவைத்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அதன் மூலம் தொலைத்தொடர்பு வசதியற்ற கிராமப்புறங்களுக்கு ஆசிரியர்கள் தமது இருசக்கர வண்டிகளில் சென்று வகுப்புக்களை மரத்தடிகள், கட்டட நிழல் போன்ற இடங்களில் நடத்திவருகிறார்கள்.
அதைத்தவிர ஷியாம் கிஷோர் தனது பாடசாலையைச் சுற்றிய இடங்களிலிருக்கும் மதில்களில் ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சொற்களைப் படங்களுடன் வரைந்தும், கணிதச் சித்திரங்களை வரைந்தும் வருகிறார். இதற்காக அவர் தனது சொந்தப் பணத்தையே செலவழித்து வருகிறார்.
வழியில் காணும் படங்களில் பார்த்து மொழி, கணிதம் போன்றவற்றை அறிந்துகொள்ளும் மாணவர்களின் ஞாபகத்தில் அவை சித்திர வடிவில் பதிகின்றன. இது தற்சமயம் கல்விக்கூடங்களை எட்டமுடியாத மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரும் உதவியாக இருக்கும் என்கிறார் கிஷோர்.
சாள்ஸ் ஜெ. போமன்