“சர்வதேசப் பயணிகளிடம் கொவிட் 19 தடுப்பு மருந்துச் சான்றிதழ் கோராதீர்கள்!”
உலக நாடுகளிடையே பயணம் செய்பவர்களிடம் கட்டாயம் கொவிட் 19 மருந்து போட்டிருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தற்போதைய நிலையில் வரவேற்கத்தக்கது அல்ல என்கிறது உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு.
“சர்வதேசப் பயணிகளிடம் குறிப்பிட்ட காலவரையுள்ள, ஆதாரத்துடன் நிரூபிக்கக்கூடிய, ஆரோக்கியம் பற்றிய தேவையுள்ள நடவடிக்கைகளைக் கூட்டாகச் சிந்தித்து நிறைவேற்றுங்கள்,” என்று கேட்டுக்கொள்கிறது உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு.
‘ஜனவரி 26 முதல் அமெரிக்காவுக்குப் பயணமாகிறவர்கள் தங்கள் பயணத்தின் முன்னர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்படவில்லை என்ற சான்றிதழைக் காட்டவேண்டுமென்று’ சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா கோரியிருந்தது. இதேபோலவே வேறு நாடுகளும் வெவ்வேறு விதமான கொவிட் 19 சான்றிதழ்களைக் கோர ஆரம்பித்திருப்பதை அடுத்தே உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு தனது அவசரகாலக் குழுவைக் கூட்டி இவ்வறிவிப்பை வழங்கியிருக்கிறது.
மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பயணம் செய்பவர்களில் “கொவிட் 19 தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டவர்களைக் கட்டுப்பாடுகளின்றிச் சுதந்திரமாகப் பயணம் செய்ய அனுமதிக்கலாம்,” என்று கிரேக்க பிரதமர் கருத்துத் தெரிவித்திருந்தார். அதை ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டர் லெயொனும் ஆதரித்திருந்தார்.
கொவிட் 19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்பவர்கள் தொற்றைப் பரப்பாதவர்களாக ஆகிவிடுகிறார்களா என்பது இதுவரை தெரியாது. அத்துடன் உலக நாடுகளிடையே தேவைக்கேற்ற தடுப்பு மருந்துகள் இன்னும் கிடைக்கவில்லை என்ற நிலைமையில் தடுப்பு மருந்து எடுத்திருப்பது கட்டாயமானது என்ற கோரிக்கை பிரயோசனமற்றது என்று உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு கருதுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்