“பெறுபேறுகள் குறையும் என்றஅழுத்தம், பயம் வேண்டாம்” – மாணவர்களிடம் மக்ரோன்.

“இந்த ஆண்டு பரீட்சைப் பெறுபேறுகள் குறையும் அல்லது குறைத்து மதிப்பிடப்படும் என்ற எண்ணங்களைக் களையுங்கள். இந்த நெருக்கடியில் இருந்து நாங்கள் விரைவிலேயே வெளியேறிவிடுவோம்.”

பல்கலைக்கழக மாணவர்களை நேற்று நேரில் சந்தித்த சமயம் அதிபர் எமானுவல் மக்ரோன் இவ்வாறு கூறி அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முயன்றார் என்று பாரிஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

“”இந்த(வைரஸ்) நெருக்கடியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் எங்களைப் பலப்படுத்தும். இனி இதுபோன்றதொரு நெருக்கடியை எதிர்கொள்வதற்குக் கூட்டாகப் பழகி விட்டோம். நூற்றாண்டு கொண்டுவரவிருக்கின்ற கொடிய பல விடயங்களை உங்கள் தலைமுறையே அனுபவிக்கின்றது. ஆனால் இதிலிருந்து நல்ல சில பெறுபேறுகளும் கிட்டும். நீங்கள் இந்த நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம். நாட்டுக்கு நீங்கள் வழங்கிய பங்களிப்பை ஒருபோதும் மறவோம்.”

-இவ்வாறு பாரிஸ் – சக்லே (University of Paris-Saclay) பல்கலைக் கழகத்தில் மக்ரோன் நேற்று மாணவர்களுடன் கலந்துரையாடிய சமயத்தில் குறிப்பிட்டார்.

பல மாதங்களாக நீடித்துவருகின்ற சுகாதாரக் கட்டுப்பாடுகள் மாணவர் சமூகத்தை குறிப்பாகப் பல்கலைக்கழக மாணவர்களின் உளவியலைப் பெரிதும் பாதித்திருப்பதாகச் சுட்டிக் காட்டப் படுகிறது. மனவிரக்தி அடைந்த மாணவர்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்கின்ற சம்பவங்கள் பற்றிய செய்திகள் நாடெங்கும் வெளிவரத் தொடங்கி உள்ளன.

அண்மையில் ஈழத் தமிழ் பின்னணி கொண்ட மருத்துவபீட மாணவியான சிநேகா சந்திரராஜா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாரிஸ் பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல செபோன் (La Sorbonne) பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவியான சிநேகாவின் மரணத்துக்கு கல்விச் சூழ்நிலை மற்றும் பெறுபேறு குறித்த மன அழுத்தங்களே காரணம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

“முதல் தவணையை நிறைவு செய்யாவிடில் என்னை உயிருடன் காணமுடியாது” (“Je ne peux pas me voir vivant si je n’ai pas mon premier semestre.”) என்று அவரால் எழுதப்பட்ட குறுஞ் செய்தி ஒன்று அவரது மொபைல் தொலைபேசியில் காணப்பட்டது என்ற தகவலை பாரிஸ் ஊடகம் வெளியிட்டிருக்கிறது.

சிநேகாவின் மரணம் தொடர்பாக மாணவர் சமூகத்தை விழிப்பூட்டும் செய்தி ஒன்றை செபோன் மருத்துவ பீடாதிபதி – மாணவியின் தற்கொலையைக் குறிப்பிடாமல்- அனைவருக்கும் பகிர்ந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்பறைகளுக்குத் தொலைவில் வீடுகளிலும் விடுதிகளிலும் இருந்தவாறு பாடங்களையும் பரீட்சைகளையும் டிஜிட்டல் வழிமுறைகளில் எதிர்கொள் வது தனிமையைப் பெருக்குவதுடன் மாணவர்களது உளவியலையும் பெரிதும் பாதித்துவருகின்றது.

கலகலப்பான கல்விச் சூழலையும் நண்பர்களையும் இழந்து தனித்துப் போன மாணவர்கள் தங்கள் மன அழுத்தங்களை அரசு கண்டுகொள்ள வேண்டும் என்று கோரிவருகின்றனர்.
அவர்கள் தங்கள் மீதான கவன ஈர்ப்பு இயக்கங்களை சமூகவலைத் தளங்கள் மூலமாக முன்னெடுத்து வருகின் றனர்.வீதி ஆர்ப்பாட்டங்களும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

பாதிப்புக்குள்ளானோர் தாங்களாகவே தங்களது நிலைமையைக் கூறுகின்ற பல சுய வீடியோ பதிவுகள் வெளியாகி உள்ளன.

(படம் : நாங்கள் “இழந்த தலைமுறை” அல்லர் என்ற கோஷத்துடன் வீதிப் போராட்டத்தில் மாணவர்கள்.)
——————————————————————–
குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *