உறுதியளித்ததைவிடக் குறைவான மருந்துகளையே ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தரமுடியும் என்கிறது அஸ்ரா ஸெனகா.
தயாரிப்பில் ஏற்பட்டிருக்கும் தடங்கல்களால் அஸ்ரா ஸெனகா நிறுவனத்தால் ஐரோப்பிய நாடுகளுக்குத் தருவதாக உறுதியளித்த தடுப்பு மருந்துகளைவிட 60 விகிதம் குறைவானவையையே கொடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மார்ச் மாதக் கடைசிக்குள் ஐரோப்பிய ஒன்றியம் அஸ்ரா ஸெனகா தடுப்பு மருந்துகள் 80 மில்லியன் பெறுவதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதே தொகையையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்பார்த்துத் தமது தடுப்பூசி கொடுத்தல் நடவடிக்கைகளைத் திட்டமிட்டிருந்தன. ஆனால், 31 மில்லியன் தடுப்பு மருந்துகளையே தம்மால் தரமுடியுமென்று அஸ்ரா ஸெனகா அறிவித்ததால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தடுப்பு மருந்துக் கால அட்டவணையும் மாற்றமடையவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
சுமார் 400 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் அஸ்ரா ஸெனகாவிடமிருந்து மட்டும் 450 மில்லியன் மருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது. அதைத் தவிர வேறு நிறுவனங்களிலிருந்தும் ஒன்றியம் மருந்துகளைப் பெறுகின்றது. மேலதிகமாக மருந்துகள் பால்கன் நாடுகள், வளரும் மற்றும் வறிய நாடுகளுக்குக் கொடுக்கப்படவிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்