Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

மூன்றாவது பொது முடக்கம் :எலிஸேயில் வரும் புதனன்று கூட்டத்துக்குப் பின் முடிவு!

தற்போது அமுலில் உள்ள இரவு ஊரடங்கின் தாக்கங்களை மதிப்பீடு செய்து அடுத்த கட்டத் தீர்மானத்தை எடுக்கின்ற முக்கிய கூட்டம் எலிஸே மாளிகையில் எதிர்வரும் புதனன்று நடைபெறவுள்ளது.

பெரும்பாலும் மூன்றாவது பொது முடக்கம் ஒன்றை அறிவிப்பதற்கான முன் ஆலோசனைகள் அந்தக் கூட்டத்தில் இடம்பெறும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மூன்றாவது தேசிய பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அதிபர் எமானுவல் மக்ரோன் வரும் புதன்கிழமை நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி வாயிலாக அறிவிக்கக் கூடும் என்று அரசின் மூத்த அமைச்சர் ஒருவரை ஆதாரம் காட்டி ஞாயிறு பத்திரிகையான “Journal Du Dimanche” இன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.

பாடசாலைகள் தொடர்ந்து இயங்குவதை அனுமதித்தவாறு வேறுபல இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டதாக மூன்றாவது பொது முடக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.ஆனால் நாட்டு மக்களுக்கான அதிபரின் அடுத்த உரை எப்போது என்பது இந்தக் கட்டத்தில் இன்னமும் தீர்மானிக்கப் படவில்லை என்று எலிஸே வட்டாரங்கள் கூறியுள்ளன.

‘மாறுபாடடைந்த வைரஸ் வகைகளின் தீவிர பரவலை எதிர்கொள்வதற்காக மற்றொரு தேசியப் பொது முடக்கம் அவசியமாகின்றது. அதற்கான தீர்மானத்தை எடுப்பதற்கான நாட்கள் நெருங்கி விட்டன. வழமை போன்று அதிபர் அதனை தொலைக்காட்சியில் தோன்றி அறிவிக்க வேண்டும். அது பெரும்பாலும் அடுத்த புதன்கிழமையாக இருக்கும்.அடுத்த வார இறுதியில் இருந்து மூன்று வாரங்களுக்கு நீடிக்கத் தக்கதாக அந்தக் கட்டுப்பாடுகள் அமையும்’ என்று மூத்த அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார்.-இவ்வாறு ஞாயிறு பத்திரிகையின் முன் பக்கச் செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்சமயம் மாலை ஆறு மணிமுதல் நடைமுறையில் இருந்துவருகின்ற ஊரடங்கு விதிகள் வைரஸ் பரவலில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களைப் பொறுத்து முக்கிய தீர்மானங்கள் அடுத்தவாரம் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

ஜேர்மனி, பெல்ஜியம், போர்த்துக்கல் போன்ற அயல் நாடுகள் புதிய வைரஸை எதிர்கொள்வதற்காகக் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்கனவே அமுல் செய்துள்ளன. இங்கிலாந்து வைரஸ் உட்பட புதிய தொற்றுக்கள் நாட்டுக்குள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பிரான்ஸ் “சற்றுப் பொறுத்துப்பார்த்து” தீர்மானங்களை எடுக்கும் கட்டத்திலேயே இன்னும் உள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *