மாதர் சங்கத்தினருக்காக கப்கேக் தயாரித்ததுக்காகக் கைதான எகிப்திய சமையல்காரி.
எகிப்தின் உயர்மட்டச் சமூகத்துப் பெண்களுக்கான மாதர் சங்கமொன்றின் நிகழ்ச்சிக்காக உணவகமொன்றில் கப்கேக் தயாரிக்க ஒழுங்கு செய்திருந்தார்கள். எல்லாருமே 70 வயதுக்கு மேற்பட்டவரான அந்தப் மாதருக்காகக் கப்கேக்குகள் ஆண்குறிகளின் சோடனையோடு தயாரிக்கப்பட்டிருந்தன.
எகிப்தின் மிகப் பழமைவாய்ந்த, 1882 இல் ஸ்தாபிக்கப்பட்ட கெய்ரோவிலிருக்கும் Gezira Club மாதர்களுடைய அந்த நடப்பு எகிப்து முழுவதும் பிரபலமாகிவிட்டது. கப்கேட்கேட் என்ற பெயரில் சமூகவலைத்தளங்களிலும் பரவிய அந்தக் கப்கேக்குகளின் படங்கள் பலவகையான விமர்சனங்களையும் தூண்டிவிட்டன.
பெண்களின் நடமாட்டத்துக்கு உலகின் மோசமான நகரென்ற பெயரெடுத்திருக்கும் கெய்ரோவில் அப்படியான நகைச்சுவைச் செயலால் அவமானம் வந்துவிடுமா என்று மனித உரிமைவாதிகளும், பெண்ணியவாதிகளும் குறிப்பிட்டார்கள். இஸ்லாமியப் பழமைவாதிகளோ அந்தச் செயல் மதத்தை அவமானப்படுத்துவதாக விமர்சித்தார்கள்.
கப்கேக்குகளைச் செய்தவரை பொலீசார் கைது செய்து இரண்டு நாட்கள் உள்ளே வைத்திருந்தபின் சுமார் 3,000 டொலர்கள் தண்டமடித்து வெளியே விட்டனர். அதே பெண்மணி ஓரிரு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஸிஸியின் படத்தால் அலங்கரிக்கப்பட்ட இனிப்பைச் செய்ததற்காகப் பாராட்டப்பட்டவராகும்.
சாள்ஸ் ஜெ. போமன்